பக்கம் : 1140
 

      (இ - ள்.) கழல் வலம் புரிந்த நோன்தாள் கடல் வண்ணன் புதல்வன் - வீரக்கழலை
வலஞ்சுற்றிக் கட்டிய வலிய கால்களை யுடைய கடல் நிறத்தானாகிய திவிட்டனுடைய
திருமகனாகிய விசயன் என்பான், காமர் குழல் வலம்புரிந்த கோதை - விருப்பம் தரும்
குழலை வலமாகச் சுற்றிய மலர் மாலையையுடைய சுதாரையின், குழைமுகம் வியர்ப்ப
வேட்டான் - தோடுகள் திகழும் முகம் வியர்க்கும்படி மணந்தான், அழல் வலம் புரிந்து
சூழ்ந்து அத்தொழில் முடிந்த பின்னை - தீயை வலமாகச் சூழ வந்து அச்சடங்குகள்
நிறைவேறிய பின்னர், தழல் வலம்புரிந்த வேலான் - தீயை ஒத்த வன்மையுடைய
வேலானாகிய விசயன், தடமுலை வாரிசார்ந்தான் - சுதாரையின் அகலியவாய
முலைப்போகம் என்னும் கடலுள் மூழ்கினான்,
(எ - று,)

     தழல்வலம் புரிந்த வேல் - நெருப்பைப் போன்று அழிக்கும் வன்மையுடைய
வேலென்க. குழைமுகம் வியர்த்தல் - மெய்ப்பாடு தடமுலைவாரி - பெரிய முலையென்னும்
இன்பக்கடல்.

     புதல்வன் கோதை முகம்வியர்ப்ப வேட்டு அத்தொழில் முடிந்த பின்னைத் தடமுலை வாரி சார்ந்தான் என்க.

(706)

 
சோதிமாலையும் அமித தேசனும் தம் நாடெய்துதல்
1837. மாதரஞ் சாய லாளு
     மணிவண்ணன் சிறுவன் றானும்
ஓதநீ ரின்ப மென்னு
     மொலிகடற் றரங்க மூழ்கச்
சோதியம் பெயரி னாளுங்
     சுடரவன் புதல்வன் றானுங்
காதலிற் களித்துத் தங்கள்
     கனவரை யுலகஞ் சார்ந்தார்.

 
     (இ - ள்.) மாதர் அஞ்சாயலாளும் - மிக்க அழகும் சாயலும் உடைய சுதாரையும்,
மணிவண்ணன் சிறுவன்றானும் - திவிட்டன் மகனாகிய விசயனும், ஓது அ நீர் இன்ப
மென்னும் ஒலிகடல் தரங்கம் மூழ்க - சான்றோர்களால் புகழ்ந்து ஓதப்படும் அழகிய
நீர்மையை உடைய காமவின்பம் என்று கூறப்படும் முழக்கமுடைய கடலின் அலைகளிலே
மூழ்கித் திளையா நிற்ப, சோதியம் பெயரினாளும் - சோதிமாலை என்பாளும், சுடரவன்
புதல்வன்றானும் - அருக்ககீர்த்தியின் மகனாகிய அமிததேசனும், காதலிற் களித்து -
காதலின்பத்தே பெரிதும் மகிழ்ச்சியடைந்து, தங்கள் கனவரை யுலகம் சார்ந்தார் -
தம்முடைய கனவிய மலையுலகமாகிய இரதநூபுரச் சக்கிரவாளத்தை எய்தினார்கள், (எ - று.)

     ஓதநீர் இன்பம் - நூலோர்களால் ஓதப்பட்ட அழகிய நீர்மையுடைய இன்பம் என்க.

      இவ்வாறு கூறாக்கால் ஓதநீர் இன்பமென்னும் ஒலிகடற் றரங்கம் என்பத கூறியது கூறலாய்ப் பொருள் படாமை காண்க.