பக்கம் : 1145 | | (இ - ள்.) அலகுடன் விளங்கும் அம்பொன் குடை நிழல் - ஒளிக்கதிருடனே திகழ்கின்ற அழகிய பொற்குடை நீழலிலே, ஓடை யுயர் களிற்று எருத்தம் மேலால் - முகபடா மணிந்த அரச யானையின் பிடரின்கண் வீற்றிருந்து, அரசர் சூழ - வேந்தர்கள் பலர் சூழ்ந்துவர, உலகு உடன் வணங்க - உலகமெல்லாம் ஒருங்கே வணங்க, பல குடை பணியச் செல்லும் - பல குடைவேந்தரும் வணங்குமாறு ஊர்வலம் செல்ல நின்ற, பண்பிது - பண்புடைய இப்பேற்றை, நமக்குத் தந்த - நமக்குக் கொடுத்தருளிய, நலனுடைத்து - நன்மையைத் தன் கண்ணே உடையதாயிற்று, அளிய - அளிக்கும் தன்மையுடைய நங்கள் - நம்முடைய, நல்வினைத் தெய்வம் அன்றே - நல்வினையாகிய ஊழ் அன்றே: அசை, (எ - று.) தெய்வம் எனினும், ஊழ் எனினும் ஒக்கும். குடை நிழலிலே, அரசர் சூழ, உலகு வணங்க, களிற்றெருத்தின் மேல், பணியச் செல்லும். இப் பண்பு நமக்குத் தந்தது நாம் ஆற்றிய நல்வினைப் பகுதியாகிய ஊழே என்றான் என்க. அனையதாகலின், அந்நல்வினை ஈண்டு முயலப்படும் என்பது கருத்தாகக் கொள்க. | (713) | | இதுவுமது | 1844. | தன்னையோ ரரச னாக்கித் தரங்கநீர் வளாக மாள்வித் தின்னுயி 1ராகச் செல்லு நல்வினை யென்னு மின்ன முன்னுப காதி தன்னை முதல்கெட முயலுங் கீழ்மை நன்னரின் 2மன்ன னன்றே நரகங்கட் கரச 3னாவான். | (இ - ள்.) தன்னை ஓர் அரசன் ஆக்கி - தன்னை ஒப்பற்ற மன்னனாகப் பிறப்பித்து, தரங்கம் நீர் வளாகம் ஆள்வித்து அலைகடலாற் சூழப்பட்ட உலகத்தை ஆளும்படி செய்து, இன்னுயிராகச் செல்லும் - இனிய உயிர்போன்று நிகழ்கின்ற, நல்வினை என்னும் - நல்வினையென்று கூறப்படுகின்ற, இன்னமுன் உபகாரிதன்னை - முன்னர் இத்தகைய உதவிசெய்த தொன்றனை, முதல்கெட - வேரொடு அழிந்துபோமாறு, முயலும் - முரண்நெறியிலே முயலுகின்ற, கீழ்மை - சிறுமையுடைய, நன்னர்இல் - நன்றி தேர்தல் இல்லாத, மன்னன் அன்றே - அரசன் அல்லனோ, நரகங்கட்கு அரசன் ஆவான் - நரகத்தை ஆளுதற்குரிய அரசனாகத் தக்கவன், (எ - று.) நல்வினையின் பெருமையை மறந்து தீவினைக்கட் செல்லும் அரசர் முதலியோரைக் கருதி இரங்கியவாறு. | |
| (பாடம்) 1 ராகிச். 2 மாந்தரன்றே. 3 ராவார். | | |
|
|