பக்கம் : 1147
 

இதுவுமது

1846. எரிபுரை யெழில தாய
      விளந்தளி ரிரண்டு நாளின்
மரகத வுருவ மெய்தி
      மற்றது பசலை கொண்டு
கருகிலை யாகி வீழ்ந்து
      கரிந்தமண் ணாதல் கண்டும்
வெருவிலர் வாழ்து மென்பார்
      வெளிற்றினை விலக்க லாமோ.
 
     (இ - ள்.) எரிபுரை யெழிலதாய இளந்தளிர் - தீப்பிழம்பை ஒத்த எழிலுடையதாகிய
 இளமையுடைய தளிர், இரண்டு நாளில் - இரண்டே நாள் அகவையின், மரகத உருவம்
எய்தி - முதிர்ந்து மரகதமணி நிறம்போன்ற பசிய உருவம் உடையதாகி, மற்றது -
அவ்விலைதானே, பசலை கொண்டு - அந்நிறம் மழுங்கி, கருகு இலையாகி - நிறங் கறுத்த
இலையாய் மாறி, வீழ்ந்து - உதிர்ந்து, கரிந்து - மக்கி, மண்ணாதல் கண்டும் - மண்ணோடு
மண்ணாய் மறைவதனைத் தாமே காட்சியளவையானே கண்டுவைத்தும், வெருவிலர் -
அவ்வழிவுபாட்டிற்கு அஞ்சாதவராய், வாழ்தும் என்பார் - இவ்வுலகத்தே இனிது அமர்ந்து
வாழக்கடவேம் என்று முயல்வோருடைய, வெளிற்றினை - பேதைமையை, விலக்கலாமோ -
அகற்றல் கூடுமோ, கூடாதென்றபடி, (எ - று.)

     இது நிலையாமைக்குக் காட்சியளவை கூறிற்று. நிலையாமைக்கு மாவின் றளிரினை
எடுத்துக் காட்டி, இவ்வாறு மண்ணாகும் உடல்பெற்றோர் வாழ்தும் என்றிருத்தல் பெரிதும்
மடமை என்றிரங்கியவாறு.

(716)

 

இதுவுமது

1847.. பிறந்தனர் பிறந்து சாலப்
     பெருகினர் பெருகிப் பின்னை
இறந்தன ரென்ப தல்லா
     லியாவரு மின்று காறு
மறைந்துயிர் 1வாழா நின்றா
     ரில்லையால் வாழி நெஞ்சே
சிறந்தது தவத்தின் மிக்க
     தின்மையே சிந்தி காண்டாய்.
 
     (இ - ள்.) பிறந்தனர் - இவ்வுலகிலே பிறந்தார்கள், பிறந்து சாலப் பெருகினர் -
பிறந்தபின்னர் மிகவும் மக்களும் மனைவியும் பேரருமாகிப் பெருகலுற்றனர், பின்னை -
மீண்டும் இறந்தனர் - மாய்ந்தொழிந்தனர், என்பதல்லால் - என்று கூறப்படுவதையன்றி,
யாவரும் - எத்திறத்தாரும், இன்று காறும் - இவ்வுலகம் தோன்றிய நாள் தொடங்கி
இற்றைவரையும், மறைந்து - கூற்றுவன் அறியாவாறு ஒளிந்தேனும், உயிர் வாழா
நின்றாரில்லை - உயிர் வாழ்வோர் இல்லை, நெஞ்சே வாழி - என் நெஞ்சமே! நீ
வாழக்கடவை, தவத்தின் மிக்கது சிறந்தது இன்மையே சிந்தி கண்டாய் -
தவவொழுக்கத்தினும் மிக்கதாய் உயர்ந்ததொன்று மானிடர்க்கில்லை என்னும்
இவ்வுண்மையை நீ நனி கருதக்கடவாய், (எ - று.)    
 

     (பாடம்) 1 வாழ.