பக்கம் : 1148
 

     பெருகினர் - செல்வமுதலியவற்றால் பெருக்கமெய்தினர் எனினுமாம்.

     “மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத்
     தலமிசைக் கொண்ட குடையர் - நிலமிசைத்
     துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட் டாரல்லால்
     எஞ்சினார் இவ்வுலகத் தில்.Ó (நாலடி. 21)

     இச்செய்யுளை ஈண்டு நோக்குக.

(717)

 

யாக்கை நிலையாமை

1848. பிறந்துநாம் புறஞ்செய் கின்ற
     பேதையிவ் வுடலந் தானும்
இறந்தநாள் போல்வ தின்றா
     யிற்றையி னாளை வேறாய்ப்
பறைந்துநாம் பற்றப் பற்றப்
     பற்றுவிட் டகலு மாகில்
சிறந்தனர் பிறர்கள் யாரே
     சிந்தைநீ சிந்தி யென்றான்.
 
     (இ - ள்.) பிறந்து - நம்மொடு நாமாகவே பிறந்து, நாம் புறஞ்செய்கின்ற - நம்மால்
பெரிதும் போற்றப்படுகின்ற, பேதையிவ் வுடலந்தானும் - அறிவிலதாகிய இவ்வுடலும், இறந்த
நாள் போல்வது இன்றாய் - கழிந்த நாள்களிலே இருந்தபடியே இராததாகி, இற்றையின்
நாளை வேறாய் - இன்றிருப்பதாம் தன்மைகெட்டு நாளைக்கு வேறு தன்மைத்தாய் மாறி,
பறைந்து நாம் பற்றப் பற்ற - தேய்ந்து யாம் அதனை விடாதே பற்றிப் போற்றா நிற்பவும்,
பற்றுவிட்டு அகலுமாகில் - அது நம்மைப் பற்றுதல் ஒழிந்து இறந்துபடுமானால், சிறந்தனர்
பிறர்கள் யாரே - நமக்குச் சிறந்த உரிமையுடையார் இவ்வுடலினும் அயலில் உள்ள பிறர்கள்
யார்தாம் உளராவார், சிந்தை - என் நெஞ்சே! நீ சிந்தி - நீ இதனை ஆராய்ந்து காணுதி,
என்றான் - என்று இயம்பினான், (எ - று.)

     நம்மோடே பிறந்து, நம்மாற் படுசாந்தும் கோதையும் கொண்டு பாராட்டிப்
புறஞ்செய்யும் இவ்வுடலம், நாடோறும் மாறி மாறி முதிர்ந்து வருதல் கண்கூடு. அதனை
யாம் எவ்வளவு விடாது பற்றினும், அது நம்மைப் பற்றாது ஒருநாள் மாண்டொழிதலும்
திண்ணம்; ஆகலின் என்னெஞ்சே இதனை நன்கு எண்ணிப்பார் என்றான் என்க.     

(718)

 

தூய் தன்மை

1849. தொகைமல ரலங்கல் சூடித்
      தூநறுஞ் சுண்ண மப்பிப்
புகைநனி கமழ வூட்டிப்
      புறஞ்செயப் பட்ட மேனி