பக்கம் : 115
 
உண் இலாப் பல வாய் உளவாயின - உண்ணுதலற்ற பல வாய்கள் உளவாயிருந்தன;
அவையாவை எனின்; கண் அனார் ஒடுகாமக் கலங்கள் - கண்ணையொத்த காதலர்களொடு
இன்பம் நுகரப்பெறாத காமக்கலங்களாகிய பரத்தையர் வாய்களேயாம், (எ - று.)

     சுவலனசடியின் ஆட்சிக்காலத்தில் அந்நாட்டில் பசியினால் வருந்தினார் எவரும்
இலர். காமக்கலங்களாகிய பரத்தையர்களின் வழியிலே ஒழுகுவார் எவரும் இலராயினார்.
ஆகவே அப்பரத்தையர் கண்ணன்ன காதலரோடு காமச்சுவையை உண்டுகளிக்கும்
வாயற்றுத் திகைக்கின்றனர். காமக்கலங்கள் - காமப்பொருள் வைக்கப்பட்ட பாத்திரங்களைப்
போன்றவர்களாகிய பரத்தையர்கள்.
 

( 25 )

அந்நகரில் எவருங் கட்டுண்டு வருந்தார்

144. மாக்கண் வைய மகிழ்ந்துதன் றாணிழல்
நோக்கி 1வைக நுனித்தவ னாண்டநாள்
தாக்க ணங்கனை யார் 2தம தாயரால்
வீக்கப் பட்டன 3மென்முலை விம்முமே.
 

     (இ - ள்.) மாக்கண் வையம் - பேரிடத்தையுடைத்தாகிய இவ்வுலகத் துயிர்கள்;
மகிழ்ந்து தன் தாள் நிழல் நோக்கி வைக - மகிழ்ச்சியுடன் தன் அடி நிழலிலே
தங்கியிருக்கும்படி; நுனித்து அவன் ஆண்டநாள் - நுட்பமான உணர்வுடன் அவன்
அரசாட்சி செய்த காலத்திலே; தாக் கணங்கு அனையார் மென்முலை - தீண்டி வருத்தும்
தெய்வ மகளிரை ஒத்த மங்கையரின் மெல்லிய கொங்கைகள்; தம தாயரால் - தம்முடைய
தாயார்களுடைய கையினால்; வீக்கப் பட்டன விம்மும் - கட்டுப்பட்டவைகளாக
வருந்துதலை யடையும், (எ - று.)

     சுவலனசடியின் ஆட்சிக் காலத்தில் அந்நாட்டிற் கட்டப்பட்டு வருந்தினார் எவரும்
இலர். கட்டப்பட்டு வருந்துதலை யடைந்தவைகள் அழகிய மங்கையர்களின் கொங்கைகளே
என்க.
 

( 26 )


     (பாடம்) 1. வைய. 2 தமைத்தாயரால். 3. மே முலை.