பக்கம் : 1151
 

(இ - ள்.) இன்னன பலவும் சிந்தித்து - இவைபோல்வன பலவற்றையும் ஆராய்ந்து,
இருந்தது மிகை என்று எண்ணி - யாம் இதுகாறும் தவநெறி புகாது இவ்வாறு
தாழ்த்திருந்ததே மிகையாய குற்றம் என்று இரங்கி, மன்னவன் - பயாபதி வேந்தன்,
உழையர் தம்மால் - பணியாளர்களாலே, மந்தித்தவரைக் கூவி - அமைச்சர்களை
அழைப்பித்து, பொன் அவிர் பவழத் திண்கால் - அழகு விரிகின்ற பவழத்தாலே ஆகிய
திண்ணிய தூண்கள் நிறுத்தப்பட்டுள்ள, புரிமணிக்கூட மெய்தி - விரும்புதற்குரிய மணிகள்
இழைத்த மந்திர சாலையை அடைந்து, தன் அமர் அமைச்சரோடும் - தன்னைப் பெரிதும்
விரும்புகின்ற தன் அமைச்சர் களோடே, தான் அமர்ந்திருந்து - தானும் வீற்றிருந்து,
சொன்னான் - சொல்லத் தொடங்கினான், (எ - று.)

     இவ்வாறு, தவம் நல்வினைகளின் சிறப்பையும்; அவை முயலாவழிப்படும் இழுக்கையும்,
நிலையாமையையும், தனக்குள் சிந்தித்த பயாபதி, மந்திரசாலை புக்கு அமைச்சரோடே
கூறுவானாயினன், என்க.

(722)

இதுவுமது

சிறந்த செல்வத்திற்கு ஊனம் யாதெனல்
1853. மலைபயில் 1களிநல் யானை
     மன்னரால் வவ்வ லின்றாய்க்
கலைபயில் மகளிர் கண்போற்
     கள்வர்கைப் படாது நாளும்
நிலையின செல்வக் கூன
     2நிகழ்வன வுரைமி னென்றான்
இலைபயின் மகரப் பைம்பூ
     ணெரிமணிக் கடகக் கையான்.
 
(இ - ள்.) மலை பயில் - மலையிடத்தே வழங்குதலையுடைய, களி நல்யானை -
மதக்களிப்புடைய நல்ல யானைகளையுடைய, மன்னரால் - பகை வேந்தர்களால், வவ்வல்
இன்றாய் - கவரப்படாததாய், கலைபயில் மகளிர் கண்போல் - ஆடல் முதலிய
கலைபயிலுதலையுடைய கணிகை மகளிருடைய கண்களைப் போன்ற, கள்வர் கைப்படாது -
களவு செய்வோருடைய கைகளிலும் அகப்படாததாய், நாளும் நிலையின செல்வக்கு -
எப்பொழுதும் நிலைபெற்றுடைய செல்வத்திற்கு, ஊனம் நிகழ்வன உரைமின் என்றான் -
இவற்றின் வெறாய் நிகழும் கேடு உளவாயில் கூறுங்கோள் என்றான், இலைபயில் மகரப்
பைம்பூண் எரிமணிக் கடகக் கையான் - இலைபோன்ற வடிவமுடைய தொழிற் சிறப்பமைந்த
மகரமீன் தலைவடிவிற்றாய முகப்பையுடைய பசிய பூணாகிய விளங்குகின்ற மணிகளாலியன்ற
கடகம் செறிந்த கைகளையுடைய பயாபதி மன்னன், (எ - று.)
 

     (பாடம்) 1 களிஞல். 2 ம் வருவன.