பக்கம் : 1154
 

     (இ - ள்.) சந்தினால் தவிர்க்கலாமோ - அக்கூற்றவாசனைச் சந்து செய்தலாலே
உயிர்கொள்ளாதபடி ஒழித்தல் கூடுமோ, சார்பினால் ஒழிக்கலாமோ - அன்றி அவன்பால்
அடைக்கலம் புகும் ஆற்றாலே ஒழித்தல் கூடுமோ, பந்தியா முன்னம்தாமே - அவன்
நம்மைக் கட்டுதற்கு முன்னரே, பகைத்து இருந்து - அவனைப் பகைத்தே அவன் நம்மேல்
வாராதபடி அரண்செய்து கொண்டு இருந்து, உய்யலாமோ - அவன்பாற் றப்பி உய்தல்
கூடுமோ அன்றி, வெந்திறல் காலன் தன்னை - வெவ்விய ஆற்றலுடைய அம்மறலியை,
மேற்சென்று - போர்மேற் சென்று போர்செய்து, வெல்லலாமோ - வென்றொழித்தல்
கூடுமோ, யாங்கள் - யாம், உய்ந்து - அம்மறலிக்குத் தப்பி, உயிர் வாழும் உபாயம் -
உயிர்வாழ்வதற்குரிய உபாயத்தை ஆராய்ந்து, உரைமின் என்றான் - கூறுங்கோள் என்று
இயம்பினான், (எ - று.)

     சாம, பேத, தான, தண்டம் என்னும் உபாயங்களாலே அம் மறலிக்குத் தப்பி உயிர் வாழ்தல் கூடுமோ உரைமின் என்றான் என்க.

(726)

 

கூற்றத்தை மாற்ற யாம் அறிந்திலோம் எனல்

1857. பீழைமை பலவுஞ் செய்து
     பிணிப்படை பரப்பி வந்து
வாழுயிர்ப் 1பொழித்து வவ்வி
     வலிந்துயிர் வாங்கி யுண்ணும்
2கூழைமை பயின்ற கூற்ற
     வரசனைக் குதிக்குஞ் சூழ்ச்சி
பாழியந் தடக்கை வேந்தே
     பயின்றிலம் யாங்க ளென்றார்.
 
     (இ - ள்.) பீழைமை பலவும் செய்து - பல்வேறு இன்னல்களையும் இயற்றி,
பிணிப்படை பரப்பி - நோயாகிய பல்வேறு படைகளையும் பரப்பி, வந்து - ஆயுள்
முடிவிலே வந்து, வாழ் உயிர்ப்பு ஒழித்து - வாழ்தற்குக் காரணமான மூச்சையும் நிறுத்தி,
உயிர் வலிந்து வவ்வி வாங்கி - உயிரை வலிந்து பிடித்துக் கவர்ந்து, உண்ணும் -
குடிக்கின்ற, கூழைமை பயின்ற கூற்ற அரசனை - கயமைத் தொழிலில் வல்லவனாகிய மறலி
மன்னனை, குதிக்கும் சூழ்ச்சி - கடத்தற்குரிய சூழ்வினையை, பாழியம் தடக்கை வேந்தே -
வலியவாய அழகிய பெரிய கைகளையுடைய அரசனே, யாங்கள் பயின்றிலம் என்றார்-
யாங்கள் கற்றோமில்லை என்று கூறினர், (எ - று.)
 

     (பாடம்) 1 வாரி. 2 கூழமை