பக்கம் : 1157
 

     “தம்முயிர்க் குறுதி எண்ணார் தலைமகன் வெகுண்ட போதும்
     வெம்மையைத் தாங்கி நீதி விடாதுநின் றுரைக்கும் வீரர்Ó

     என்று நல்லமைச்சரைக் கம்பர் கூறிய இச் செய்யுளை ஈண்டு ஒப்புக் காண்க.
இவ்வாறு கூறிய அமைச்சரை மகிழ்ந்து நோக்கிக் காலனைக் கடத்தற்குரிய சரண் பிறிது
உரைமின் என்றான் என்க.

(730)

 
lமறலியைக் கடத்தற்குத் துறவியைச் சரண் புகுவேமெனல்
1861. இனியன போன்று தோன்றி
     நுகர்ந்தவர்க் கிறுதி செய்யும்
கனிபுரை கிளவி நீக்கிக்
     கண்ணனார் 1கருத்துட் கொண்டு
துனிவன நினையுங் காலன்
     றுணிவன துணியுஞ் சூட்சி
முனிவரை வணங்கிக் கேட்டு
     முயறுமோ வடிக ளென்றார்.
 
     (இ - ள்.) இனியன போன்று தோன்றி - தொடக்கத்தில் ஆற்றவும் இன்பம் தருவன
போன்று காணப்பட்டு, நுகர்ந்தவர்க்கு - தம்மை நுகர்ந்தவர்களுக்கு, இறுதி செய்யும் -
அழிவினை உண்டாக்குவனவாகிய, கனிபுரை கிளவி நீக்கி - கற்பகக் கனிபோன்ற
இனிமையுடைய மகளிர் மொழிகளின் இன்பத்தை ஒருவி, கண் அனார் கருத்து உட்கொண்டு
- நன்னெறி காட்டலாலே நம் கண்ணை ஒத்த சான்றோர்கள் செய்தருளிய மெய்ந் நூலின்
கருத்துக்களை நன்கு உள்ளத்தே கொண்டு, துனிவன நினையும், - வருத்துவனவற்றையே
கருதுகின்ற, காலன் துணிவன - மறலி துணியும் செயல்களை, துணியும் சூட்சி - துணித்
தொழிக்கும் ஆராய்ச்சியை உடைய, முனிவரை - துறவியை, வணங்கிக் கேட்டு - வணங்கி
வினாவி, முயறுமோ - அவர்காட்டும் நெறி நின்று முயல்வோமோ, அடிகள் என்றார் -
அரசனே என்று இயம்பினார், (எ - று.)

     காலனைக் கடத்தற்குரிய புகல் இதுவே பிறிதில்லை என்றபடி.

     “நெடுங்காமம்முற்பயக்கும் சின்னீர வின்பத்தின் முற்றிழாய்
     பிற்பயக்கும் பீழை பெரிதுÓ (நீதிநெறி வி - 3)என்னும் குமர குருபர அடிகளார் திருவாக்குடன்.

     “இனியன போன்று தோன்றி நுகர்ந்தவர்க் கிறுதி செய்யும் கனிபுரை கிளவிÓ என்னும் அடியினை ஒப்புக் காண்க.

     முனிவரை வணங்கிக் கேட்டு முயல்வோம் என்றார் என்க.

(731)

 

     (பாடம்) 1 என்ன சொன்னார்.