பக்கம் : 1159
 

     வன்மையினையுடைய, பரிகின்ற படர் - வருந்துதற்கேதுவாகிய துயரங்களை,
ஒழிமனத்தன் ஆனான் - ஒழிந்து விளக்கமுடைய மனத்தை உடையனா யினான், ( அவன்
யாரெனில்) சொரிகின்ற மதுவின் மாரித்துவலையின் நனைந்த தாரான் - பொழியா நின்ற
தேன் மழையின் துளியாலே நனைதலையுடைய வெற்றி மாலை அணிந்த பயாபதி வேந்தன்,
(எ - று.)

     உயிரின் துயர்க்கெல்லாம் காரணமாதல் பற்றிக் காதிதன்னால் உரிமைவல்ல படர்
என்றார்.

     எரிகின்ற விளக்கின்கண் நெய் பெய்து திரியையும் தூண்டிவிட்டாற் போன்று பயாபதி மன்னன் அமைச்சர் அறிவுரைகளாலே விளக்கமுற்று துயர் தீர்ந்தான் என்க.

(733)

 

விழா முரசறையப் பணித்தல்

1864. 2கரும்பணி மொழியி னார்தங்
     கருந்தடங் கண்ணும் வண்டும்
சுரும்பணை முலையி னாருந்
     தொடையலுந் துதைந்த மார்பன்
அரும்பணி யசோக நீழ
     லடிகள தணிபொற் கோயில்
விரும்பணி விழவு சாற்றி
     வியன்முர சறைக வென்றான்.
 
     (இ - ள்.) கரும்பு அணி மொழியினார்தம் - கரும்பை ஒத்த இனிமையுடைய அழகிய
மொழிகளையுடைய மகளிரின், கருந்தடங்கண்ணும் - கரியவாய் அகன்ற கண்களும், வண்டும்
- வண்டினங்களும், சுரும்பு அணை முலையின் ஆரும் தொடையலும் - வண்டுகள்
மொய்க்கின்ற அம்மகளிரின் முலையிடத்தே பொருந்திய பூந்தொடையல்களும், துதைந்த
மார்பன் - செறிந்த மார்பையுடையவனாகிய பயாபதி வேந்தன், அரும்பு அணி அசோக
நீழல் அடிகளது - அரும்புகளாலே அழகுடைய அசோக மரத்தினது நீழலிலே எழுந்தருளிய
அருகக்கடவுளின், அணிபொன் கோயில் - அழகிய பொன்னாலியன்ற திருக்கோயிலின்கண்,
விரும்பு அணி விழவு சாற்றி - சான்றோர்களால் விரும்புதற்குரிய அழகுடைய விழா
நிகழ்ச்சியை அறிவித்து, வியன் முரசு அறைக என்றான் - அகலிதாய முரசத்தை
முழக்குங்கோள் என்று பணித்தருளினான், (எ - று.)

     அமைச்சரின் உரைகேட்ட பயாபதி மன்னன் அசோக நீழலடிகட்கு விழவு சாற்றி முரசறைக என்றான் என்க.

(734)

 

     (பாடம்) 1 கரும்பிணி.