பக்கம் : 116
 

கடியவையும் கொடியவையும்

145. 1வடிய வாளவ னாளவும் வாய்களில்
கடிய வாயின கள்ளவிழ் தேமல
ரடிய வாய்ப்பயப் பட்டடங் காவலர்க்
கொடிய வாயின கொங்கவிழ் சோலையே.
 

     (இ - ள்.) வடிய - கூரிய; வாளவன் ஆளவும் - வாட்படையை யுடைய சுவலனசடி
மன்னன் அரசாட்சி செய்யவும்; வாய்களில் கடியவாயின - வாய்களால்
நறுமணமுடையனவாயன; கள்அவிழ் தேமலர் - தேனை வெளிப்படுத்தும் நறுமலர்களாகும்;
அடியவாய் - அடியிடத்திலே; பயப்பட்டு - நீர் ஊற்றப்பெற்று - அடங்கா அலர்க்
கொடியவாயின - மிகுந்த மலரைக் கொண்ட கொடிகள் பொருந்தப் பெற்றவைகள்; கொங்கு
அவிழ் சோலை - மணத்தை வெளிப்படுத்துகிற பொழில்களேயாம், (எ - று.)

     வாய்களில் கடிய வாயின - வாய்களாற் கடுமையையுடையனவாயின; அடியவாய் -
அடிக்கப்பெற்றவைகளாய்; பயப்பட்டு - அஞ்சி; அடங்கா - அடங்காமல்;
அலர்க்கொடியவாயின - பழிதூற்றுங் கொடுமையையுடையன வாயின; என்ற வேறு
பொருளுங் காண்க. அந் நாட்டில் கடுஞ்சொற் கூறுவோரும், அடிபடுவோரும், பிறரை
இகழ்ந்து பழித்துரைப்போரும் இலர் என்பது இதனால் உரைக்கப்பட்டது.
 

( 27 )

அரசன் மனைவி வாயுவேகை

146. மாய மாயநின் றான்வரை மார்பிடை
மேய பூமகள் போல விளங்கினாள்
தூய வாமுறு வற்றுவர் வாயவள்
வாயு வேகையென் பாள்வளர் கொம்பனாள்.
 

     (இ - ள்.) மாயம் மாய நின்றான் - தனது ஆட்சியின்கண் பொய்யாயின வெல்லாம்
கெட (மெய்யாயின எல்லாம் தழைக்க)ச் செங்கோன் முறைமையின்கண் நிலைத்து
நின்றவனாகிய அச்சுவலனசடி மன்னனுடைய, வரை மார்பிடை - உத்தம விலக்கணமமைந்த
மார்பின்கண்; மேய - இயல்பாகவே பொருந்தியுள்ள; பூமகள் போல - திருமகளைப்
போன்றே;
 


     (பாடம்) 1. வடிகொள்.