பக்கம் : 1160
 

வள்ளுவர், விழாச் சிறப்புரைத்து முரசம் முழக்குதல்

1865. ஒளியவ னுலகம் தன்னுட்
     கரந்தவ னுயிர்க ளுய்யும்
அளியவ னருள்செய் யாழி
     யுடையவ னடிமை செய்வார்க்
கெளியவ னெந்தை பெம்மாற்
     கியற்றிய விழவின் மிக்க
களியவ ரென்ப செம்பொற்
     கதிர்முடி சூடு வாரே.
 
     இது முதல் மூன்று செய்யுள், ஒரு பொருள்மேல் அடுக்கிவந்தன.

     (இ - ள்.) ஒளியவன் - ஒளிப்பிழம்பானவன், உலகந் தன்னுட் கரந்தவன் -
உலகங்களினூடே மறைந்து நின்றவன், உயிர்கள் உய்யும் அளியவன் - உயிர்களைப் பிறவிப்
பெருங்கடலினின்றும் கரையேற்றி உய்யக் கொள்வதொரு பேரருள் உடையவன், அருள்செய்
ஆழியுடையவன் - அறப் பேராழியை உடையவன், அடிமை செய்வார்க்கு - தன்னடிகளிலே
வழிபடுதலுடையார்க்கு, எளியவன் - எளிதில் அறியப்படுபவன், எந்தை - எம்
தந்தையாகியவன், பெம்மாற்கு - ஏவர்க்கும் பெருமான் என்று கூறப்படுகின்ற
அருகக்கடவுளுக்கு, இயற்றிய - எடுக்கப்பட்ட, விழவின்மிக்க களியவர் - திருவிழாக்
காட்சியிலே மிகுந்த மகிழ்ச்சி கொள்ளும் இயல்பைபுடையோர், செம்பொற் கதிர்முடி
சூடுவார் என்ப - இவ்வுலகத்தை ஆளும் மன்னராய்ப் பிறந்து ஒளியுடைய முடிசூட்டிக்
கொள்வோர் ஆவர் என்று சான்றோர் கூறுவர், (எ - று.)


     “இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
     பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டுÓ
என்னும் திருக்குறட் கருத்தை ஈண்டுக் காண்க.

     இறைவன் விழாவை விரும்பிக் காண்போர் அப்புண்ணியப்பயனால் மன்னராய்ப் பிறந்து மணிமுடி சூடுவர் என்க.

(735)

 
 
1866. அருள்புரி யழலஞ் சோதி
     யாழியா னாதி யில்லான்
மருள்புரி வினைகட் கென்று
     மறுதலை யாய வாமன்
இருள்புரி யுலகஞ் சேரா
     வியனெறி பயந்த பெம்மான்
பொருள்புரி விழவு காண்பார்
     புண்ணிய வுலகங் காண்பார்.