பக்கம் : 1164 | | இதுவுமது | 1871. | விரையினான் மெழுகிய வீதி வாயெலாம் திரையினார் செழுமணி முத்தஞ் சிந்தினார் உரையினா லென்னையவ் வொளிகொண் மாநகர் புரையினாற் பொன்னுல கிழிந்த தொத்ததே. | (இ - ள்.) விரையினால் மெழுகிய வீதிவாய் எலாம் - மணச் சாந்தாலே மெழுகப்பட்ட வீதியிடமெங்கும், திரையின் ஆர் செழுமணி முத்தம் சிந்தினார் - கடலிலே தோன்றுவனவாய செழிப்புடைய மணியாகிய முத்துக்களைத் தூவினார், உரையினால் என்னை - அவ்வழகைக் காட்டச் சொற்களால் ஆகக்கடவதென்னை, அவ்வொளிகொள் மாநகர் - அந்த ஒளிமிக்க போதன மாநகரம், புரையினால் - உவமையால் (ஒருவாறு கூறுமிடத்தே), பொன்னுலகு - தேவர் உலகம், இழிந்தது ஒத்ததே - இப்பூமியில் இறங்கியதனை ஒத்திருந்தது (என்னலாம்), (எ - று.) வீதிகள்தோறும் விரையினால் மெழுகி முத்தஞ்சிந்தினார், அவ்வொளிகொள் மாநகர் வானுலகம் மண்ணின்மேல் இறங்கியதனை ஒத்திருந்தது. | (741) | | இதுவுமது | 1872. | கழுமிய காழகி லாவி 1காமரு செழுமணி மாளிகைச் சென்னி சூழ்வது விழுமணி விளங்கிய விலங்கன் மீமிசைத் தழுவிய விளமழை தவழ்வ தொத்ததே. | (இ - ள்.) கழுமிய காழ் அகில் ஆவி - திரண்ட காழ்ப்புடைய அகிற்புகை, காமரு - விரும்புதற்குக் காரணமான, செழுமணி மாளிகை - செழிப்புடைய மணிகள் பதித்த மாட மாளிகைகளின், சென்னி சூழ்வது - முடியிலே தவழ்வது, விழுமணி விளங்கிய விலங்கல் மீமிசை - சிறந்த மணிகள் திகழ்கின்ற மலையின் உச்சியிலே, தழுவிய இளமழை தவழ்வது ஒத்ததே - பொருந்திய வெண்மேகங்கள் தவழ்வதை ஒத்திருந்தது, (எ - று.) இளமழை - வெண்முகில். அகிற்புகை மாளிகையின் சென்னிகளிலே சூழ்வது முகில்கள் மலைகளின் மேல் தவழ்வதை ஒத்திருந்தது. | (742) | |
| (பாடம்) 1 காமருஞ். | | |
|
|