பக்கம் : 1166
 

     மேலும் வெளிய மருப்புடைய களிறுகளிலே ஏறி வெண்டாமரைப் பூவாகிய பலியை
விண்ணோர் மருள ஏந்தி உலகம் மருளுமொரு தோற்றத் தோடே பொலிந்தனர் என்க.

(744)
 
மன்னர்கள் செவ்வணி அணிந்து திருவிழாவிற்கெழுதல்
1875 செம்மலர்க் கண்ணியர் செம்பொற் றாரினர்
கொய்ம்மலர்க் குங்குமங் குழைந்த சாந்தினர்
கைம்மலர் மணிநகைக் கடகம் வில்லிட
மெய்ம்மல ரணியினர் வேந்த ராயினார்.
 
     (இ - ள்.) செம்மலர்க் கண்ணியர் - சிவந்த நிறமுடைய மலர்களானாய முடிமாலையை
உடையராய், செம்பொற்றாரினர் - சிவந்த அழகுடைய மாலைகளை அணிந்தவராய்,
கொய்ம்மலர்க்குங்குமம் குழைந்த சாந்தினர் - கொய்தற்குரிய செம்மலர்கொண்டு
புனையப்பட்ட தோள்மாலையோட சிவந்த குங்குமத்தாலாய சாந்தம் பூசியவராய், கைம்மலர்
மணிநகைக் கடகம் வில்லிட - தங்கையாகிய மலர்களிடத்தே செறிக்கப்பட்ட கடகம்
என்னும் அணிகலன் ஒளிபரப்ப, மெய்ம்மலர் அணியினர் - உடலிடத்தே திகழ்கின்ற
அணிகலன்களையும் அணிந்து கொண்டவராய், வேந்தர் ஆயினார் - மன்னர்கள் கோலங்
கொண்டவராயினார், (எ - று.)

     அந்தணர் வெள்ளணி அணிந்தாற்போன்று) அரசர்கள் செம்மலர் மாலை சூடிக்
குங்குமம் திமிர்ந்து செஞ்சாந்துபூசி செந்நிற மணியணிகலன் பூண்டனர் என்க.

(745)

 
இதுவுமது
1876. 1செந்நிறக் குவளைகை செய்த சூட்டினர்
அந்நிறந் தழுவிய வரத்த வாடையர்
மெய்ந்நிறஞ் செய்யன வேழ மீமிசைக்
கைந்நிற மலரொடு கலந்து தோன்றினார்.
 
     (இ - ள்.) செந்நிறக் குவளைகை செய்த சூட்டினர் - சிவந்த நிறமுடைய செங்கழு
நீர்மலரால் புனையப்பட்ட முடிமாலையை உடையராய், அந்நிறம் தழுவிய அரத்த
ஆடையர் - அந்த நிறமே கொண்ட சிவந்த ஆடைகளை உடுத்தவராய், மெய்ந்நிறம்
செய்யன வேழம் மீமிசை - உடலின் நிறம் சிவப்பாம்படி ஒப்பனை செய்யப்பட்ட
யானைகளின் பிடரின் மிசை, கைந்நிறமலரொடு கலந்து தோன்றினார் - தத்தம் கைகளின்
நிறமாகிய செந்நிறமமைந்த பூப்பலியோடே சேர்ந்து விளங்குவாராயினர் மன்னர்கள்,
(எ - று.)    
 

     (பாடம்) 1 செய்ந்நிற.