பக்கம் : 1168
 

     மேலும் அவ்வணிகர்கள், பொன்னாடையுடுத்துப், பொன்மலர்ப் பலி ஏந்தி,
யானைமேல் நிரைத்துத், தம் மகளிருடனே போந்தனர் என்க.

(778)
 
பயாபதி வேந்தன் யானைமேல் வருதல்
1879. நகரமாங் கெழுந்தபி னரலுஞ் சங்கொடு
முகுரவாய் மணிமுர சதிரு மூரிநீர்
மகரமால் கருங்கடன் மருளுந் தானையான்
சிகரமால் யானைமேற் செல்வன் றோன்றினான்.
 
     (இ - ள்.) நகரம் ஆங்கு எழுந்தபின் - நகரத்தில் வாழும் மக்கள் அவ்வாறு
எழுந்தவுடனே, நரலும் சங்கொடு - முழங்குகின்ற சங்குகளுடனே, முகுரவாய் - கண்ணாடி
போன்ற வாயை யுடைய, மணிமுரசு அதிரும் - அழகிய முரசங்கள் முழங்கும், மூரிநீர் -
பெருகிய நீரையுடைய, மகரமால் கருங்கடல் - மகரமீன்கள் உலவுகின்ற பெரிய கருமையான
கடலைப்போலும், தானையான் - படையையுடைய பயாபதி வேந்தனாகிய, செல்வன் -
செல்வமிக்கோன், சிகரமால் யானை மேல் தோன்றினான் - மத்தக முடியையுடைய பெரிய
யானை மேலே வந்தான், (எ - று.)

     முரச முழக்கும்தானை, கடல்போலும் தானை, என்று கூட்டுக.

     நகரமக்கள் அவ்வாறு எழுந்தவுடன் தானையான், செல்வன் யானை மேற் றோன்றினான் என்க.

(779)

 
திவிட்டநம்பியின் வருகை
1880. வேல்புரை கண்ணியர் கவரி வீசவெண்
பால்புரை பவழக்காற் குடையி னீழலான்
மால்புரை கருங்கடல் வளாகங் காவலன்
கால்புரை புரவியங் கடலுட் டோன்றினான்.
 
     (இ - ள்.) வேல் புரை கண்ணியர் - வேலை ஒத்த கண்களையுடைய மகளிர்கள்,
கவரிவீச - சாமரை யிரட்ட, பவழக்கால் - பவளத்தாலியன்ற காலையும், வெண்பால் புரை -
வெள்ளையான பால்போன்ற நிறத்தையும் உடைய, குடையின் நீழலான் - குடை நீழலையும்
உடையவனாய், மால்புரை - திருமாலை ஒத்த, கருங்கடல் வளாகம் காவலன் - கரிய
கடலாற் சூழப்பட்ட நிலவுலகத்தை ஓம்பும் திவிட்டமன்னனும், கால்புரை -
காற்றைப்போன்று விரைந்த செலவினையுடைய, புரவியம் கடலுள் தோன்றினான் - குதிரைப்
படையாகிய அழகிய கடலின் நடுவே தோன்றுவானாயினான், (எ - று.)