பக்கம் : 1169
 

     திவிட்ட நம்பி கண்ணியர் கவரிவீசக் குடையின் நீழலான், புரவியங்கடலுள்
தோன்றினான் என்க.

(780)
 
 
1881. புதமெழு புரவிகள் புடை 1பரந்திட
மதமழை பொழிவன வயிரக் கோட்டன
கதமழ லெழவுமிழ் தகைய 2காணில
விதமெழு களிறுகள் பலமி டைந்தவே.
 
     (இ - ள்.) புதம் எழு புரவிகள் - தாவி எழா நின்ற குதிரைகள், பரந்திட - மிக்குப்
பரவாநிற்ப, மதமழை பொழிவன - மதநீரை மழைபோன்று மிக்கு உகுப்பனவும்,
வயிரக்கோட்டன - வயிர மணியாலியன்ற பூண் செறிக்கப்பட்ட கோடுகளையுடையனவும்,
கதம் அழல் எழ உமிழ் தகைய - சினத்தீ மிக்கெழுமாறு காலும் தன்மையுடையனவும்,
காண் நிலவிதம் எழு களிறுகள் - காணத்தகுந்த ஒளிவகைகள் பலவும் தோன்றித் திகழும்
ஒப்பனையுடையனவும் ஆகிய களிற்றியானைகள், பலமிடைந்தவே - பற்பல குழீஇயின,
(எ - று.)

     நில - நிலா.

     புரவிகள் பரவ, களிறுகள் பொழிவனவாய்க் கோட்டனவாய்த் தகையனவாய் மிடைந்த
என்க.

(781)

 
1882. ஆர்த்தன பல்லிய மதிர்ந்த குஞ்சரம்
தேர்த்தன தேர்க்குழாந் 3திகைத்த பல்லுயிர்
போர்த்தன கொடிமிடை பொழிந்த பூமழை
வேர்த்தன விளிந்தன 4வினைக ளென்பவே.
 
     (இ - ள்.) பல்லியம் ஆர்த்தன - இசைக்கருவிகள் ஆரவாரித்தன, குஞ்சரம் அதிர்ந்த
- யானைகள் பிளிறின, தேர் குழாம் தேர்த்தன - தேர்க் கூட்டங்கள் நெருங்கின, பல்
உயிர் திகைத்தன - பல்வேறு உயிர்களும் திகைப்புற்றன, மிடை கொடி போர்த்தன -
செறிந்த கொடிகள் விசும்பை மறைத்தன, மழை பொழிந்த - மலர்மாரி பொழியப்பட்டன,
வினைகள் வேர்த்தன விளிந்தன என்பவே - தீயவினைகள் உடல் வெயர்த்து
இறந்தொழிந்தன என்று சான்றோர் கூறுவர், (எ - று.)
 

     (பாடம்) 1 பரந்திடை. 2 கானில்.3 திசைத்த. 4 வினைய.