பக்கம் : 1172 | | | 1887. | பாடுவா 1ர் பலாண்டிசை பரவு வார்பரந் தாடுவா ரறிவனைப் பரவி யார்களும் கூடுவார் குழவுமெய் குழுமி யெங்கணும் ஊடுதான் வியலிட முள்ள தில்லையே. | (இ - ள்.) அறிவனைப் பரவி - அருகபரமேட்டியை வாழ்த்தி, யார்களும் - எத்திறத்தாரும், பரந்து ஆடுவார் - பரவி நின்று அன்புமிகுதியானே ஆடுவாருமாய், பலாண்டு இசைபாடுவார் - இசையானே பல்லாண்டு பாடுவாருமாய், பரவுவார் - வணங்குவாருமாய், கூடுவார் - கூடுகின்றவர்களுடைய, மெய்குழுமி - உடல்கள் நெருங்கி, ஊடுதான் - உள்ளிடத்தே, வியல்இட முள்ளது இல்லை - சிறிதும் வெற்றிடம் இல்லையாயிற்று, (எ - று.) வியல் - மிகுதி - மிகுந்த இடம் எனவே வெற்றிடம் என்றாம். யார்களும் - யாவர்களும், வகரம் கெட்டது. பாடுவார், பரவுவார் ஆடுவார் கூடுவார் குழுமி வெற்றிடம் இல்லையாயிற்றென்க. | (787) | | 1888. | நொவ்வகை வினைப்பகை யகற்றி நூனெறி செவ்வகை மொழிந்தவன் செல்வச் சேவடிக் கிவ்வகை யெழுவகை விழவு 2செல்வுழி நெய்வகை வேலவ னிலைமை கேட்கவே. | (இ - ள்.) நொவ் வகை வினைப்பகை அகற்றி - உயிர்களின் துயரங்கட்குக் காரணமான பல்வேறு வகையாய வினையாகிய பகையை அகலச் செய்து, நூல் நெறி செவ்வகை மொழிந்தவன் - பரம ஆகமத்தின் வாயிலாய் வீட்டுநெறியை நன்கு விளக்கியருளியவனாகிய அருகக்கடவுளின், செல்வச் சேவடிக்கு - முத்தி இன்பமாகிய அழியாத செல்வத்தை அடியார்க்கு நல்கும் செவ்விய திருவடிகட்கு, இவ்வகை எழுவகை விழவு - இவ்வாறு எழாநின்ற பலவகைப்பட்ட திருவிழா, செல்வுழி - நிகழுமிடத்தே, நெய்வகை வேலவன் - நெய்பூசப்படும் முறைமைத்தாய வேலையுடைய பயாபதி மன்னரின், நிலைமை கேட்கவே - நிலைமையினை இனி யாங் கூறக் கேளுங்கள். வினைப்பகை அகற்றி, மொழிந்தவன் சேவடிக்கு, இவ்வகை விழவு செல்வுழி, பயாபதியின் நிலைமையை, யாம் கூறுவேம், கேண்மின் என்று தேவர் கூறினர் என்க. | (788) | |
| (பாடம்) 1 ரெண்டிசை. 2செல்வழி. | | |
|
|