பக்கம் : 1173
 
பயாபதி மன்னன் திருக்கோயிலுக்குச் செல்லல்
1889. நீர்ப்பலி விரைப்பலி நிரந்து தேனிமிர்
பூப்பலி யெனவிவை நிரைத்துப் புண்ணியன்
சீர்ப்பொலி சினகரஞ் சென்று சேர்ந்தனன்
ஆர்ப்பொலி தழுவிய வரவத் தானையான்.
 
     (இ - ள்.) நீர்ப்பலி விரைப்பலி நிரந்துதேன்இமிர் பூப்பலி - நீராகிய பலியும், மணப்
பொருளாகிய பலியும், செறிந்து வண்டுகள் பாடுகின்ற மலராகிய பலியும், என இவை
நிரைத்து - என்று கூறப்படுகின்ற இம்மூவகைப் பலியும் நிரலே கொண்டு, புண்ணியன் -
அறவோனாகிய அருகக்கடவுளின், சீர்ப்பொலி சினகரம் சென்று சேர்ந்தனன் - சிறப்பாற்
பொலிவுற்றுத் திகழ்கின்ற திருக்கோயிலுக்குப் போய்ச் சேர்ந்தான், ஆர்ப்பு ஒலி தழுவிய
அரவத்தானையான் - ஆரவாரிக்கும் ஒலியாலாய முழக்கத்தையுடைய படைகட்கு
மன்னனாகிய பயாபாதி, (எ - று.)

     அரவத்தானையான் நீர்ப்பலி முதலிய மூவகைப் பலியும் கொண்டு புண்ணியன்
சினகரம் சென்று சேர்ந்தனன் என்க.

(779)

 
1890. கோடுயர் கோபுர 1வாய்தல் சேர்ந்துதன்
நீடுயர் மழகளி றிருவித் தானிழிந்
தேடுய ரினமல ரேந்தி யீர்ம்பொழின்
மாடுயர் வளநகர் வலங்கொண் டெய்தினான்,
 
     (இ - ள்.) கோடு உயர் கோபுர வாய்தல் சேர்ந்து - சிகரங்களால் உயர்ந்துள்ள
கோபுரங்களையுடைய கோயில் முன்றிலை எய்தி, தன் நீடு உயர் மழகளிறு இருவி - தனது
நீண்டுயர்ந்த இளைய ஆனையை நிறுத்தி, தான் இழிந்து - அவ்வியானையினின்றும் தான்
இறங்கி, ஏடு உயர் இனமலர் ஏந்தி - இதழ்களையுடைய உயரிய வகையவாய
மலர்களைக்கையின் ஏந்திக் கொண்டு, மாடு ஈர்ம் பொழில் உயர் வளநகர் - பக்கத்தே
குளிர்ந்த சோலைகள் உயர்ந்துள்ள வளமுடைய திருக்கோயிலை, வலங்கொண்டு எய்தினான்
- வலஞ்சூழ்ந்து வந்தடைந்தான், (எ - று.)

     பயாபதி கோபுர வாயில் சேர்ந்து, களிற்றை நிறுத்தி, மலரேந்தி, வளநகர்
வலங்கொண்டு எய்தினான் என்க.

(780)

 

     (பாடம்) 1 வாயில்.