பக்கம் : 1174 | | பயாபதியின் கடவுட் காட்சி | 1891. | மன்னவ னணைதலு மலர்ந்த வாணிலாப் பொன்னணி வளநக ரத்துப் பொங்கரி துன்னிய வணைமிசைத் துளங்குஞ் சோதியோ டன்னண 1மசோகம ரடிக டோன்றினார். | (இ - ள்.) அன்னணம் மன்னவன் அணைதலும் - அவ்வாறு பயாபதி மன்னன் எய்தியபொழுது, மலர்ந்த வாள்நிலா பொன் மணி அணி வளநகரத்து - விரிந்த ஒளிச்சுடருடன் பொன்னால் அழகு செய்யப்பட்ட வளமுடைய திருக்கோயிலின்கண், பொங்கு அரி துன்னிய அணைமிசை - சினமிக்க சிங்கம் பிடரிற் றாங்கப் பட்ட அணையில் மேல், துளங்கும் சோதியோடு - மிளிருகின்ற ஒளியுடனே, அசோகு அமர் அடிகள் தோன்றினர் - அசோகமரத்தின் நீழலிலே வீற்றிருக்கும் அருகக்கடவுள் காட்சியருளினர், (எ - று.) பயாபதி மன்னன் கோயிலுட் சென்று அரியணையில் சோதியோடு தோன்றிய அடிகளைக் கண்டனன் என்க. | (781) | | அருகக்டவுள் அமர்ந்த அணையின் சிறப்பு | 1892. | குஞ்சரத் தடக்கைய குழவிச் சென்னிய மஞ்சிவர் தோற்றத்து மகர வாயொடு செஞ்சுடர் மணிநிரை யழுத்திச் செம்பொனால் அஞ்சுட ருமிழ்வதவ் வணையின் வண்ணமே. | (இ - ள்.) குஞ்சரத் தடக்கைய குழவிச் சென்னிய - யானையின் பெரிய கையையும் குழவியாகிய களபத்தினது தலையையும் உடையதாயும், மஞ்சிவர் தோற்றத்து - முகில்கள் தவழும் உயர்ந்த தோற்றத்துடன், மகரவாயொடு - மகரமீனின் வாய்களுடன், செஞ்சுடர் மணிநிரை அழுத்தி - செவ்விய சுடருடைய மணிகளை வரிசையாகப் பதித்து, செம்பொனால் அம்சுடர் உமிழ்வது - செம்பொன்னாலியற்றப் பட்டமையால் அழகிய ஒளிகால்வதாம், அவ்வணையின் வண்ணமே - அவ்வடிகள் அமர்ந்த திரு அணையின் தன்மை, (எ - று.) தடக்கையை யுடையதும் சென்னியை உடையதும் ஆகி மரகவாயோடு மணி நிரையழுத்திச் சுடருமிழ்வது அவ் வணையின் வண்ணம் என்க. | (782) | |
| (பாடம்) 1 அசோகமர்ந்தடிக. | | |
|
|