பக்கம் : 1177
 

     (இ - ள்.) மாமழைக் கண்ணியர் - கரிய குளிர்ந்த கண்ணையுடைய மகளிர்கள்,
மருங்கு போல்வன - இடையை ஒத்தனவாகி, தூம் மழை வளர்கொடி - பொழிகின்ற
மழையாலே செழித்து வளர்கின்ற பூங்கொடிகள், பத்திகள் துவன்றி - ஒழுங்குபட நெருங்கி,
பாமழை யுருவகள் பலவும் தோன்றவே - பரவுதலையுடைய மழைத்தாரைகளின் உருவங்கள்
பல தோன்றும்படி, பூமழை - பொழியா நின்ற மலர்மாரி, பொன்னிலம் புதைய வீழ்ந்தவே -
அழகிய நிலம் மறையும்படி வீழா நின்றன, (எ - று.)

     மழையால் வளர்கொடி செறிந்து மழையுருவுடையவாய்த் தோன்றின. பூமழை வீழ்ந்த
என்க.

(787)
 
1898. 1மொய்த்தலிங் கலர்மழை முருகு லாவிய
மைத்தலை விசும்பிடை மயங்க வானவர்
கைத்தலம் பரவிய காம ரின்னியம்
எத்திசை மருங்கினு மிரங்கித் தோன்றுமே.
 
     (இ - ள்.) வானவர் - அமரர்கள், கைத்தலம் பரவிய - கைகளாலே தூவப்பட்ட.
மொய்த்து இலங்கு அலர் மழை - செறிந்து விளங்குகின்ற மலர்மாரி, மைத்தலை
விசும்பிடை மயங்க - முகில்களையுடைய விண்ணிடத்தே பொருந்தா நிற்ப, வானவர்
கைத்தலம் பரவிய - அத்தேவர்களின் கைகளிலே பரவியுள்ள, காமர் இன்னியம் - அழகிய
துந்துபி என்னும் இசைக்கருவி, எத்திசை மருங்கினும் - எல்லாத் திசைகளிடத்தும், இரங்கித்
தோன்றுமே - முழக்கத்தோடே தோன்றா நிற்கும், (எ று.)

     அலர்மழை விசும்பிடை மயங்க இன்னியம் எத்திசை மருங்கினும் இரங்கித் தோன்றும்
என்க.

(788)

 
 
1899. மைஞ்ஞலம் பருகிய கருங்கண் மாமணிப்
பைஞ்ஞலம் பருகிய 2பரும வல்குலார்
மெய்ஞ்ஞலம் விஞ்சையர் விரவ மேலெலாம்
3கிஞ்ஞர மிதுனங்கள் கிளர்ந்து தோன்றுமே.
 
     (இ - ள்.) மைஞ் ஞலம் பருகிய கருங்கண் - மையினது நன்மையை உண்ட கரிய
கண்ணையுடையவரும், மாமணிப் பருமம் - சிறந்த பதினென்கோவை மணிவடம் பூண்ட,
பைஞ்ஞலம் பருகிய - பாம்புப் படத்தின் எழிலையுடைய, அல்குலார் - அல்குற்றடத்தை
யுடையவருமாகிய மகளிரோடே, மெய்ஞ்ஞலம் விஞ்சையர் விரவ - உடலழகுமிக்க
விச்சாதரர்கள் வந்து பரவா நிற்ப, மேல் எலாம் - விசும்பிடமெங்கும், கிஞ்ஞர மிதுனங்கள்
- கின்னரம் என்னும் ஆண் பெண் ஆகிய இணைப்பறவைகள், தோன்றும் - தோன்றா
நின்றன, (எ - று)
 

     (பாடம்) 1 மொய்த்தலங். 2 வல்குலாரொடு. 3கிஞ்ஞலர்.