பக்கம் : 118
 

இருவரின் இன்பநிலை

148. கோவை வாய்க்குழ லங்குளிர் கொம்பனாள்
காவி வாணெடுங் கண்ணியக் காவலற்
காவி யாயணங் காயமிழ் தாயவன்
மேவு நீர்மைய ளாய்விருந் தாயினாள்.
 

     (இ - ள்.) கோவை வாய்க் குழல் அம்குளிர் கொம்பு அனாள் - கோவைப்பழம்
போலச் சிவந்த வாயையும் கூந்தலையுமுடைய அழகிய குளிர்ந்த கொம்பைப் போன்றவளும்
காவி வாள் நெடும் கண்ணி - கருங்குவளை மலரையும் வாட்படையையும் போன்ற நீண்ட
கண்களையு முடையவளுமாகிய அவ்வாயுவேகை; அக் காவலற்கு - அந்தச்
சுவலனசடியரசனுக்கு; ஆவியாய் - உயிர் போன்றவளாயும்; அணங்காய் - இன்பநோயைச்
செய்பவளாயும்; அமிழ்தாய் - உண்ணும் அமிழ்தத்தைப் போன்றவளாயும்; அவன் மேவும்
நீர்மையள்ஆய் - அவ்வரசன் இடையறாது விரும்புந் தன்மையையுமுடையவளாய்; விருந்து
ஆயினாள் - அவ்வரசனுக்கு என்றும் புதியவளானாள், (எ - று.)

     வாயுவேகை சுவலனசடி யரசனுக்கு உயிர்போன்றவளாயும், இன்ப நோயைச்
செய்பவளாயும், அமிழ்தத்தைப் போன்றவளாயும் என்றும் புதியவளாக விளங்கினாள் என்க.
கோவை என்ற கொடியின் பெயர் அதன் பழத்திற்கு ஆகுபெயர். சில நாள் பழகிய
அளவில் ஒருவர்மாட்டு ஒருவர்க்கு வெறுப்புண்டாதல் உலகத்தியற்கை. பன்னாள் பழகினும்
அவனுக்கு என்றும் புதியவளாய் விளங்கினாள் என்பார் “விருந்தாயினாள்“ என்றார்.

( 30 )

அருக்ககீர்த்தி என்னும் மகன் பிறத்தல்

149. முருக்கு வாயவண் முள்ளெயிற் றேர்நகை
யுருக்க வேந்த னொருங்குறை கின்றநாள்
பெருக்க மாகப் பிறந்தனன் 1பெய்கழல்
அருக்க கீர்த்தியென் பானலர் தாரினான்.
 

     (இ - ள்.) முருக்கு வாயவள் முள் எயிற்று ஏர்நகை உருக்க - பலாச மரத்தின் மலர்
போன்ற சிவந்த வாயையுடைய வாயு வேகையினது கூரிய பற்களினின்று உண்டாகின்ற
அழகிய புன்னகையானது தன்னுள்ளத்தையுருகச்செய்ய;
 


     (பாடம்) 1. பெய்கழ - கருக்க கீர்த்தி.