(இ - ள்.) தெருளாமையால் - அறியாமை காரணமாக, வினவற்பாலது ஒன்றுண்டு - அடியேன் அடிகளை வினவுதற்குரிய பொருள் ஒன்றுளது, அஃதியாதெனில், திருவடிகள் - அடிகளாருடைய திருவடிகளை, செம்பொன் ஆர் அரவிந்தம் ஏந்த - செவ்விய பொன்னிறமமைந்த தாமரை மலர் ஏந்தா நிற்பவும், இருளாழி ஏழுலகும் - இருட்கடலிலே மூழ்கியுள்ள ஏழுலகங்களும், சூழ் ஒளியின் மூழ்க - நின்னைச் சூழ்ந்துள்ள ஒளிவட்டத்துள்ளே மூழ்காநிற்பவும், இமையாத செங்கண்ணின் இமையோர் வந்து ஏத்த - இமைத்தற்றொழிலில்லாத சிவந்த கண்ணையுடைய தேவர்கள் நின்னைச் சூழ்ந்து வந்து புகழ்பாடி ஏத்தா நிற்பவும், உருள் ஆழியானும் - உருள்கின்ற ஆழியங்கடவுளும்,
ஒளிமணி முடிமேற் கைவைத்து - ஒளியுடைய மணிகள் பதித்த தனது முடிக்கலன் மிசையே தன் கைகளைக் குவித்தபடியே, ஒரு பாலில்வர - ஒரு பக்கத்தே வாராநிற்பவும், அருளாழி முன் செல்ல - தருமசக்கரம் முன்னர்ச் செல்லா நிற்பவும், உலகம் நின்னுழையதாக - உலகமனைத்தும் உன்னுள்ளே அடங்கிக்கிடப்பனவாகவும், பின செல்வது என்னோ - அருளாழியின் பின் எழுந்து செல்லா நிற்றற்குக் காரணம் யாதோ,
அடிப்படாதாய் நின்ற அகல் ஞாலம் உண்டோ - உனது திருவடியாட்சியிற் படாதொழிந்த விரிந்த உலகம் வேறும் உளதேயோ, உரைத்தருள்க, (எ - று.)