பக்கம் : 1189 | | அப் பொன்மண்டபத்தே பயாபதி மன்னன் ஒரு துறவியைக் கண்டு வணங்கல் | 1914. | ஆங்கொர் முனிவ னருந்தவப் பல்குணந் தாங்கிய மாமலை யன்ன தகையவன் பூங்கமழ் சேவடிப் போதுதன் பொன்முடி தாங்கிய தாம நுதியாற் றுடைத்தான். | (இ - ள்.) ஆங்கு ஓர் முனிவன் அருந்தவப் பல்குணம் தாங்கிய மாமலை அன்ன தகையவன் - அப் பொன் மண்டபத்தின் கண்ணிருந்த செயற்கருந் தவத்திற்கியன்ற பலவாகிய பண்புகளை உடைய சிறந்த மலைபோலும் தகுதியுடையான் ஒரு துறவியின், பூங்கமழ் சேவடிப்போது - அழகிய மணங்கமழ்கின்ற சிவந்த மலர்போன்ற அடிகளை, தன் பொன்முடி தாங்கிய தாமநுதியால் - பயாபதி வேந்தன் தனது பொன்னாலியன்ற முடியின்மிசை சூட்டப்பட்டுள்ள மலர்மாலையின் நுனியாலே, துடைத்தான் - துடைத்தனன், (எ - று.) முடியின் அணிந்த மாலை அம்முனிவன் அடியிற் றோய, பயாபதி மன்னன் அத்துறவியின் அடியில் வீழ்ந்து வணங்கினான், என்றபடி. அருந்தவப் பல்குணம் என்றது பரஹ்ய தவப்பண்புகளை. அவையாவன:- அனசனம், ஆவமோதர்யம், விருத்தி பரிசங்க்யானம் இரச பரித்தியாகம், விவிக்தசய்யாசனம், காயக்லேசம், என்பன. துளக்கமின்மையான் மாமலை அன்னதகையன் என்க. | (804) | | அத்துறவியின் வாழ்த்துப்பெற்று பயாபதி அமர்தல் | 1915. | ஆற்றி லமைந்த வருந்தவத் தால்வினை ஊற்றுச் செறித்த வொருபெயர் மாதவன் மாற்றரு மந்திர வாய்மொழி யாயிடை ஏற்றன கொண்டாங் கிறைவ னிருந்தான். | (இ - ள்.) ஆற்றில் அமைந்த அருந்தவத்தால் - துறவறத்தார்க்குரிய நெறியென மெய்ந்நூல்களால் வரையறை செய்யப்பட்ட வழியிலே நின்றியற்றிய செயற்கரிய தவவொழுக்கத்தாலே, வினை ஊற்றுச் செறித்த - வினைகள் தோன்றும் வழிகளை அடைத்தொழித்த, ஒரு பெயர் மாதவன் - ஒப்பற்ற புகழ் உடைய அப்பெருந்துறவியினுடைய, மாற்று அருமந்திர வாய்மொழி - அருளிக்கூறினும் வெகுண்டு கூறினும் தம் பயனைப் பயந்தே விடுதலை ஒருவரானும் மாற்றற்கு இயலாத ஆற்றலுடைய மறைமொழியாகிய மெய்ம்மொழியை, ஆயிடை - அப்பொழுது, ஏற்பனகொண்டு - தன் தகுதிக்கேற்ப, அம்முனிவரன் மொழிந்தவற்றை மேற்கொண்டு, ஆங்கு - அவ்விடத்தே, இறைவன் இருந்தான் - பயாபதி மன்னன் அமர்ந்தான், (எ - று.) | |
| | | |
|
|