பக்கம் : 119
 
வேந்தன் ஒருங்கு உறைகின்றநாள் - சுவலனசடி மன்னன் அம் மனைவியுடன்
கூடிவாழ்கின்ற காலத்தில்; அலர்தாரினான் - மலர்ந்த மலரினால் தொடுக்கப்பெற்ற
மாலையை அணிந்தவனாகிய; பெய்கழல் - மறக் கழலையணிந்த; அருக்க கீர்த்தி என்பான்
- அருக்க கீர்த்தியென்னும் பெயரினையுடையவன், பெருக்கம் ஆகப் பிறந்தனன் -
சிறப்புண்டாகுமாறு தோன்றினான், (எ - று.)

     வாயுவேகையோடு சுவலனசடி யரசன் இன்பந்துய்த்து வாழுங் காலத்தில் அருக்க
கீர்த்தி என்னும் மகன் தோன்றினன் என்க. முருக்கு - பலாசமரம்; அதன் மலர்க்கு
முதலாகுபெயர். “மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட்பேறு“ என்பது
பற்றிப் பெருக்கமாகப் பிறந்தனன் என்றார்.
 

( 31 )

சுயம்பிரபை என்னும் மகள் பிறத்தல்

150. நாம நல்லொளி வேனம்பி நங்கையா
யேம நல்லுல கின்னிழிந் தந்நகைத்
தாம மல்லிகை மாலைச் சயம்பவை
1காம வல்லியுங் காமுறத் தோன்றினாள்.
 

     (இ - ள்.) அம்நகை - அழகிய பற்களையும்; தாம மல்லிகைமாலை - ஒளியுள்ள
மல்லிகை மாலையையும் உடைய; சயம்பவை - சுயம்பிரபை என்பவள்; ஏமம் நம்உலகின்
இழிந்து - இன்பமே நுகருமிடமான விண்ணுலகினின்றும் இறங்கி; நாமநல் ஒளி வேல்நம்பி
நங்கையாய் - அச்சத்தை யுண்டாக்குவதும் நல்ல ஒளியுள்ளதுமான வேற்படையையுடைய
சிறந்தோனாகிய அருக்ககீர்த்தியின் தங்கையாய்; காமவல்லியும் காமுறத் தோன்றினாள் -
கற்பகத்திற் படரும் காம வல்லிக்கொடியும் தன் அழகைக் கண்டு விரும்புமாறு பிறந்தாள், (எ - று.)

     அருக்க கீர்த்திக்குத் தங்கையாகச் சுயம்பிரபை என்பவள் தோன்றினாள் என்க. நம்பி
என்பது ஆண்பாற் சிறப்புப்பெயர்; நங்கை என்பது பெண்பாற் சிறப்புப்பெயர்; நம்பி
நங்கையாய் - என்பதற்குச் சிறந்த ஆண்மகனான சுவலனசடியின் சிறந்த மகளாக என்று
பொருள்

 

     (பாடம்) 1. காம நல்லொளி.