பக்கம் : 1192
 

     (இ - ள்.) மந்திர மாந்தர் மொழிதலும் - அமைச்சர்கள் இவ்வாறு கூறிய உடனே,
வான் இடை அந்தரம் வாழும் அமரர் வழிபடும் - விசும்பினிடையே உள்ள அந்தர உலகில்
வாழ்கின்ற தேவர்களும் வணங்கும், தந்திரம் சான்ற தவத்திற்கு அரசனும் -
நூலறிவானிரம்பிய தவத்திற்கு அரசனாகிய அம்முனிவனும், இந்திரன் அன்னாற்கு எடுத்து
உரைக்கின்றான் - தேவேந்திரனை ஒத்த சிறப்புடைய பயாபதி மன்னனுக்கு அறவுரைகளை
எடுத்துக் கூறுவானாயினான், (எ- று.)

     தந்திரம் - நூல். இந்திரன் அன்னான்: பயாபதி. அத்துறவி பயாபதிக்கு, திருவறம்
எடுத்துக் கூறுகின்றான் என்க.

(809)

 
1920. கதியுங் கதியினுட் டுப்புமத் துப்பின்
விதிசெய் வினையும் வினைவெல் வகையு
மதியவர் காமுறும் வீட்டது மாண்பும்
அதிபதி கேளென் றருந்தவன் சொன்னான்.
 
     (இ - ள்.) கதியும் - உயிர்கள் செல்லும் பிறப்பும், அக்கதியினுள் - அப்பிறப்பினுள்,
துப்பும் - நிகழும் நுகர்ச்சியும், அத்துப்பின் விதி செய்வினையும் - அந்நுகர்ச்சியை
ஒழுங்குபடுத்துகின்ற வினைகளின் தன்மையும், அவ்வினை வெல்வகையும் -
அவ்வினைகளை வென்றொழிக்கும் உபாயமும், மதியவர் காமுறும் வீட்டது மாண்பும் -
மெய்யறிஞரால் விரும்பப்படுகின்ற முத்தியின் மாட்சிமையும், அதிபதி - அரசனே,
கேள் - யாம் கூறக்கேட்பாய், என்று அருந்தவன் சொன்னான் - என்று அரிய தவமிக்க
அத்துறவி கூறினான், (எ - று.)

     கதியும் துப்பும் வினையும் வினைவெல்வகையும் வீட்டது மாண்பும் கேள் என்று
அருந்தவன் கூறினன் என்க.

(810)

 
நால்வகைப் பிறப்பும் நவிலல்
1921. ஓடுஞ் சகடத் துருளு மொளிகொள
வீடி லொருவன் 1விசிறும் வளையமும்
ஆடுந் துகளு மெனச்சுழன் றாருயிர்
நாடுங் கதியவை நான்குள கண்டாய்.
 
     (இ - ள்.) ஓடும் சகடத்து உருளும் - ஓடாநின்ற பண்டியின் உருளைகளையும்,
ஒளிகொள - ஒளியுண்டாகும்படி, வீடில் ஒருவன் - தொழிலை விடாதியற்றுகின்ற
ஒருவனாலே, விசிறும் வளையமும் - சுழற்றி எறியப்படுகின்ற வளையத்தையும்,
ஆடும் துகளும் - காற்றாலே
 

     (பாடம்) 1 விசிறு