பக்கம் : 1193
 

     இயங்குகின்ற அணுவையும், என - போன்று, ஆருயிர் சுழன்று - சிறந்த உயிர்கள்
சுழற்சியடைந்து, நாடும் கதியவை - விரும்பிச் செல்கின்ற கதிகள், நான்கு உள கண்டாய் -
நான்கு உள்ளன, அறிக, (எ - று)

     சகடத்துருளும், வளையமும், துகளும் போலச் சுழன்று உயிர்கள் நாடும் பிறப்பு
நான்கு வகைத்தாம், என்றான் என்க.

(811)
 
இதுவுமது
1922. நரகர் விலங்கு 1மனிதர்நற் றேவர்
விரவி னவர்தம் விகற்ப முரைப்பின்
பெருகு 2முரையென்று பெய்ம்மலர்த் தாரோன்
உருக வொருவா றுறுவ னுரைத்தான்.
 
     (இ - ள்.) நரகர் விலங்கு மனிதர் நல்தேவர் - நரகரும் விலங்குகளும் மனிதர்களும்
நல்லதேவர்களும் என்னும் அந்நாற்கதியுள்ளும், விரவினவர்தம் - கலந்தவருடைய, விகற்பம்
உரைப்பின் - வேற்றுமைகளை விரித்துக் கூறப்புகின், உரைபெருகும் என்று - மொழிகள்
மிகையாக விரியும் என்று கருதி, பெய்ம் மலர்த்தாரோன் உருக - பெய்யப்பட்ட மலர்
மாலையணிந்த பயாபதி மன்னன் உள்ளம் இன்பத்தாலே நெகிழ்ந்துருகும்படி, ஒருவாறு -
சுருங்கச்சொல்லி விளங்கவைக்கும் ஒரு வழியானே, உறுவன் - அத்துறவி, உரைத்தான் -
கூறினான், (எ - று.)

      உறுவன், உரைப்பிற் பெருகுமென்று தாரோன் உருக ஒருவாறு உரைத்தான், என்க.

(812)

 
நரகர்கதித் துன்பம்
1923. கீழா 3நரகங் கிளத்தும் படலங்கள்
ஏழா யிருபத் திரட்டியோ டொன்பது
போழா மவற்றுள் ளவர்கள் புகலிடம்
பாழா மிலக்கமெண் பஃதுட னான்கே.
 
     இது முதல் 3 செய்யுள் ஒரு தொடர்

     (இ - ள்.) கீழாம் நரகங்கள் - கீழே உள்ளனவாகிய நரக லோகங்கள், கிளத்தும்
படலங்கள் - கூறப்படுகின்ற பகுதிகள், ஏழாய் - ஏழாகி விரிந்து, இருபத்து இரட்டியோடு
ஒன்பது - நாற்பத்தொன்பது. போழாம் - உட்பிரிவு களையும் உடையனவாம், அவற்றுள் -
அவ்விடங்களில், அவர்கள் புகலிடம் - அந் நரகர்கள் புகும் புரைகள், பாழாம் இலக்கம்
எண்பஃது உடன் நான்கே - எண்பத்து நான்கு நூறாயிரம் என்னும் முடிவையுடையவாம்,
(எ - று.)
 

     (பாடம்) 1 மனிச ரமரர். 2 முரையொன்று. 3நரகம் நரக.