பக்கம் : 1194
 

       பாழாம் இலக்கம் எண்பத்துநான்கு - இலக்கத்தோடு முடிகிற எண்பத்துநான்கு
என்றபடி.

     பாழ்ஆம் - முடிவு ஆம். எனவே, எண்பத்துநான்கு நூறாயிரம் என்றவாறாயிற்று.
போழ் - பிரிவு. படலம் - பகுதி.

     “ஏழாய் அவை விரிந்து எண்பத்துநான்கு நூறாயிரமாம் போழாம் அவற்றப் புரையின்
விகற்பம்Ó என்றார் நீலகேசியினும்.

 (813)

 

நரகங்களின் பெயர்

1924. இருளி னிருளு மிருளும் புகையும்
அருளி லளறு மணலும் பரலும்
மருளின் மணியு மெனவிப் பெயர
பொருளி 1னரகங்கள் போதரக் கொண்ணீ.
 
     (இ - ள்.) இருளின் இருளும் - பேரிருளும், இருளும் - இருளும், புகையும் - புகையும்
அருள் இல் அளறும் - அருட்பண்பிலாத சேறும், மணலும் - மணலும், பரலும் -
பரற்கற்களும், மருளின் மணியும் - வியப்புடைய மணியும், என இப்பெயர - என்று
கூறப்படுகின்ற இவ்வேழு பெயர்களை உடையன, பொருள்இல் நரகங்கள் - சிறந்த பொருள்
இல்லாத இந்த நரகங்கள், போதரக்கொள் நீ - இவற்றை உள்ளத்தே புகுத நீ உணர்ந்து
கொள்வாயாக, (எ - று.)

     இருளின் இருள் - தமத்தமப்பிரபை, இருள் - தமப்பிரபை, புகை - தூமப்பிரபை,
அளறு - பங்கப்பிரபை, மணல் - வாலுகாப் பிரபை, பரல் - சர்சராப் பிரபை, மணி -
ரத்னப் பிரபை, என்பனவாம். இவை நரகங்களின் பெயர் என்க.

(814)

 
1925. ஆங்க ணரக மடைந்தார் படுதுயர்
ஈங்க ணுரைப்பி னெமக்கும் 2பனிவரும்
வாங்கி யவற்றின் முதலதன் வார்த்தைகள்
பாங்கின் மொழிவன் பனிமலர்த் தாரோய்
 
     (இ - ள்.) ஆங்கண் - அவ்விடத்தே, நரகம் அடைந்தார் - அந்நரகங்களை
அடைந்தவர்கள், படுதுயர் - நுகரா நிற்கும் துன்பங்களை, ஈங்கண் உரைப்பினும் -
இவ்விடத்தே யாம் கூறுமிடத்தும், எமக்கும் பனிவரும் - எனக்கும் துன்பமுண்டாம்,
அவற்றின் முதலதன் - அந்நரகத்தில்
முதலாவதாகிய பேரிருருளைப்பற்றிய, வார்த்தைகள் வாங்கி - மொழிகளை எடுத்து, பாங்கின்
- முறையாலே, மொழிவன் - கூறுவேன், பனிமலர்த் தாரோய் - குளிர்ந்த
மலர்மாலையையுடைய வேந்தனே, (எ - று.)

     முதலது - பேரிருள் (தமத்தமப்பிரபை.) உரைப்பினும் - என்ற தன்கண் சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. எமக்கும் என்றது - இன்பதுன்பம் ஒரீஇய துறவியாகிய எமக்கும் என்றவாறு. உம்மை சிறப்பும்மை.

(815)

 

     (பாடம்) 1 னரகர்கள். 2பணிவரும்.