பக்கம் : 1196
 

     (இ - ள்.) பேழைப் பிளவும் - பெட்டிகளைப்போன்று திறந்து மூடும் வாய்களையும்,
பிலத்தின் முகங்களும் - குகை போன்ற இருண்ட வாயையும், தாழிப் பதலையும் -
தாழியாகிய பதலை என்னும் பாண்டத்தின் வாயையும்,

     போலும் தகையன - போன்ற தகுதியுடைய வாய்களையுமுடைய, ஆழப் பரந்த -
ஆழ்ந்தகன்ற, அழுகல் அளறு அவை - அழுகற்பொருள் நிறைந்த அந்நரகங்கள்,
பீழைப்பதகர் - பிறவுயிர்க்கு இன்னாசெய்யும் பாவிகள், பிறக்கும் இடமே - பிறந்து
வருந்துதற்குரிய இடங்களாகும், (எ - று.)

     பேழைப் பிளவு - பேழையைப் போன்ற பெரிய வாய்.

     பிளவும் முகங்களும் போலும் தகையன அழுகலளறு. பீழைப் பதகர் பிறக்கும் இடம்
என்றார், என்க.

(817)
 
1928. குழிபடு கும்பிக் கருவாய் பெருகி
அழுக லுடம்பிவை யங்கு நிறைந்தால்
வழுவி யனல்படு பாறைக்கண் 1வைகிப்
புழுவி னுருள்வ பொரிவ பொடிவ.
 
     (இ - ள்.) குழிபடு கும்பி - குழியில் நிறைந்துள்ள கும்பியின், கருவாய் பெருகி -
பிறப்பின் வாயிலாய்ப் புகுந்து நிறைந்துள்ள, அழுகல் உடம்பு இவை - அழுகிய
உடம்பையுடைய இவ்வுயிர்கள், அங்கு நிறைந்தால்- அக்குழி யிடமிலாதபடி
நிறைந்தவிடத்தே, வழுவி - அவற்றினின்றும் விலகி, அனல்படு பாறைக்கண் வைகி -
நெருப்புடைய பாறைக்கற்களின் மேலே தங்கி, புழுவின் - புழுக்களைப்போன்று, பொரிவ -
பொரிந்து வருந்து வனவும், பொடிவ - துகளாய்ப் போவனவும் ஆம், (எ - று.)

     அக் கும்பிகளிடமில்லாதபடி அவ்வுயிர்கள் நிறைந்துவிட்டால், பின்னர் நெருப்புப்
பாறைகளின்மேற் றங்கி புழுக்களைப் போன்று உருண்டும் பொரிந்தும் பொடிவனவாம்
என்க.

(818)

 
1929. புழுவி னுருண்டு பொடிந்தவர் பொங்கி
எழுவர் 2புகைஇந் தெழுந்தபின் மீட்டும்
வழுவினர் வீழ்வர் 3மறிந்துமவ் வாறே
ஒழிவிலா தேனை யுள்ளள வெல்லாம்.
 
     (இ - ள்.) புழுவின் உருண்டு பொடிந்தவர் - அவ்வாறு புழுப்போலே பாறையின்
உருண்டு துகளாயவர், பொங்கி - துன்பம் நிறையப்பெற்று, எழுவர் - மீளவும் எழாநிற்பர்,
புகைஇந்து - நெஞ்சம் புகைந்து, எழுந்த பின் - எழுந்த பின்னர், மீட்டும் - மீளவும்,
வழுவினர் வீழ்வர் - வழுக்கி வீழா நிற்பர், மறிந்தும் அவ்வாறே - மறுபடியும்
அவ்வண்ணமே, ஒழிவிலாது ஏனை உள்ளளவு எல்லாம் - ஓய்வின்றித் தாம்
ஆங்கிருத்தற்கு எஞ்சிய காலமெல்லாம், (எ - று.)
 

     (பாடம்) 1 மீது. 2புகையைந். 3பெயர்த்து மவ். சூ.- 76