பக்கம் : 1197
 

     அங்ஙனம் உருண்டவர் மீண்டும் பொங்கி எழுவர், மீண்டும் வழுவி வீழ்வர் மீண்டும் அவ்வாறே, என்க.

(819)

 
1930. அந்தோ வறனே யெனவழைப் பார்களை
வந்தோ மெனச்சொல்லி வாங்கு பவரில்லை
வெந்தே விளிந்து மொழியார் விழுந்துயர்
ழுந்தே 1வினைய முயன்றனர் புக்கார்.
 
     (இ - ள்.) அந்தோ அறனே என அழைப்பார்களை - ஐயகோ இஃது அறமோ என்று
தம் துயர் தவிர்க்கும்படி கூவி ஓலமிடுகின்ற அந் நரகர்களை, வந்தோம் எனச்சொல்லி -
வருந்தற்க இதோ நும்மைக் காப்பாற்ற வந்துள்ளேம் என ஆறுதல் கூறி, வாங்குபவர்
இல்லை - தம்மை எடுப்பாரையும் இலராய், வெந்தே - அத்தீயிற் கிடந்து வெந்தும்,
விளிந்தும் ஒழியார் - இறந்தொழிவாருமல்லர், முந்தே விழுத்துயர் இனைய முயன்றனர்
புக்கார் - அவர்கள் யார் எனில் முன்பிறவிகளிலே பெருந்துயர் இவை போல்வனவற்றைப
பிற உயிர்க்கு முயன்று செய்து அத்தீவினையால் இந்நரகத்தே புகுந்தவர்கள், (எ - று.)

     அந்நரகத்தே கிடந்து வருந்துபவர் துயரம் பொறாது அந்தோ அறனே என்று
அழைக்குமிடத்தும் அவர்க்குப் புகலாவார் ஒருவரையும் பெறாராய் வேகாநிற்பர்;
இறந்தொழிவாருமல்லர். இவ்வாறு வருந்துவார் யாரெனில் முற்பிறவிகளிலே பிறவுயிர்கட்கு
இன்னா செய்தார் என்க.

(820)

 
1931. அன்னணம் வேதனை யெய்து 2மவர்களைத்
துன்னி யுளர்சிலர் 3தூர்த்தத் தொழிலவர்
முன்னதிற் செய்த வினையின் முறைபல
இன்னண மெய்துமி னென்றிடர் செய்வார்.
 
     (இ - ள்.) அன்னணம் வேதனை எய்தும் அவர்களை - அவ்வாறு துன்பமுறும்
அந்நரகர்களை, துன்னி உளர்சிலர் - நெருங்கி உளராகிய சிற்சிலர், தூர்த்தம் தொழிலவர் -
தீத் தொழிலையே செய்தவராகிய நீவிர், முன்னதிற் செய்த வினையின் முறை -
முற்பிறப்பிலே செய்த தீவினையின் பயனாகிய முறைமையுடைய, பல இன்னணம் - பல்வேறு
துயரங்களையும் இவ்வாறே, எய்துமின் என்று - நுகருங்கோள் என்று கூறிக் கடிந்து, இடர்
செய்வார் - மேலும் துன்புறுத்தா நிற்பர், (எ - று.)

     அங்ஙனம் இடர் செய்வார் எமபடர் என்க.
 

     (பாடம்) 1விளைய. 2பவர்களை. 3துற்றத்தொழிலவர். தூற்றத்தொழிலவர்.