பக்கம் : 1198
 

     அவ்வாறு வேதனை எய்தும் அவர்களை எமபடர் முன் செய்த தீவினைப் பயனை
இவ்வாறு நுகர்மின் என்று மேலும் இன்னா செய்வர் என்க.

(821)
 
1932. தங்கிருட் போதிற் றலைச்சென் றயன்மனை
அங்கு மகிழ்ந்தா னவளிவள் காணெனச்
செங்கன லேயென வெம்பிய 1செம்பினில்
பொங்கனற் பாவைகள் புல்லப் புணர்ப்பார்.
 
     (இ - ள்.) இருள் தங்கு போதில் - இருள் வதிகின்ற இராக்காலத்தே, அயன்மனைத்
தலைச்சென்று - அயலான் இல்லத்தே சென்று, அங்கு மகிழ்ந்தாளவள் -
அவ்விடத்தேயுள்ள பிறனோடு கூடிக் களித்தவளாகிய, இவள்காண் என - இவளைக்
காணுங்கோள் என்று கூறி, செங்கனலே என செவ்விய தீப்பிழம்பைப் போன்று, வெம்பிய -
உருகிய, செம்பினில் பொங்கு அனற்பாவைகள் - செம்பாலியன்ற பொங்கும் நெருப்புப்
படிவங்களை, புல்லப் புணர்ப்பார் - தழுவும்படி செய்வார், (எ - று.)

     இரவில், பிறன்மனை புக்குப் பிறனோடு களித்தவளாகிய இவள் படும்பாட்டைப்
பாருங்கோள் என்று கூறி, அத்தகைய மகளிரை நெருப்புப் பாவைகளோடு
புணர்த்துவரென்க.

(822)

 
1933. கொள்ளு மிவையெக் கூட்டில் வளர்த்ததம்
வள்ளுகிர்ப் பேழ்வாய் ஞமலி வடிவுகள்
அள்ளிக் கதுவ வலறி 2யயலது
முள்ளிற் புனைமர மேற முயல்வார்.
 
     (இ - ள்.) தம் கூட்டில் வளர்த்த - தம்முடைய கூடுகளிலே அடைத்து
வளர்க்கப்பட்ட, வள்ளுகிர் பேழ்வாய் ஞமலி - வளைந்த நகங்களையும் பெரிய
வாயையுமுடைய நாய்களை, கொள்ளும் இவையென -- இவையிற்றை இரையாகத்
தின்னுங்கோள் என ஏவ, வடிவுகள் அள்ளிக் கதுவ - அந்நாய்கள் பசியோடே
ஆங்குள்ளாரின் உடல்களை வாயாலே அள்ளிக்கொண்டு கவ்வாநிற்ப, அலறி - ஆற்றாது
அழுது, அயலது - பக்கத்தே உளதாகிய, முள்ளிற் புனைமரம் - முட்களோடே
செய்தமைத்த மரங்களின் மேலே, ஏற முயல்வார் - அந்நாய்களுக்குத் தப்புமாறு ஏறுவதற்கு
விரைவார், (எ - று.)

     எமபடர், தம் கூட்டிலடைத்த நாய்களைத் திறந்துவிட்டு இவர்களைத் தின்னுமின்
என்று ஏவுதலாலே, அந்நாய் அவர்கள் தசையினைக் கவ்வ, ஆற்றாராய் அயலுள்ள
முண்மரத்தே ஏறிஉய்வேம் என்று ஓடாநிற்பர் என்க.

(823)

 

     (பாடம்) 1செம்பினை. 2 யவலது.