பக்கம் : 12
 
முடிசூடினான். புராணங்களை நன்கு கற்ற புலவர்கள் சிலர் திவிட்டனைப்பார்த்து, “தங்கள்
வரலாறு மன்னர் பலர் வரலாறுகளோடு புராணங்களுட் கூறப்பட்டுள்ளது. தாங்கள்
பலபத்திரனோடு கூடிப் பகைவரை வென்று பஞ்சாயுத கருட சீதேவியாகிய எழுவகைப்பட்ட
அருங்கலத்தையும் இரு நிதியையும் பதினாறாயிரம் நகரங்களையும் அரசர் கூட்டங்களையும்
பெறுவீரென்றும், அதன் பின்னர்க் கோடிக்குன்றம் என்னும் மலையினைப் பெயர்த்
தேந்துவீர்களென்றும் புராணங்கள் கூறுகின்றன. எதிர்கால நிகழ்வுகளையுணர்ந்த
முனிவர்களால் கூறப்பெற்ற இப்புராணங்கள் பொய்யாக மாட்டா. அந்நிகழ்ச்சியினையும்
நாங்கள் காண விரும்புகிறோம்“ என்றனர். திவிட்டன் பலரும் தன்னைப் புடைசூழச்சென்று
கோடிக்குன்றம் என்னும் மலையைப் பெயர்த்தெடுத்துக் குடையைப் போலக்
கையிலேந்தினன்; இச்செய்தி அரசியற்சருக்கத்தில் கூறப்பெறும். இவ்வரலாறு கண்ணபிரான்
கோவர்த்தனகிரியைக் குடையைப்போல் எடுத்து ஆக்களைப்புரந்த செய்தியோடு
ஒத்திருக்கிறது. “மஞ்சுசூழ் மணிவரை எடுத்தமால்“ என்னும் தொடர் திவிட்டனுக்கும
திருமாலுக்கும் பொருந்துமாறு அமைந்துள்ள நயம் போற்றத்தக்கது.

     மால் அமர் அணிநகர் என்று இயைக்க. திருவிழாக்காலத்தில் நகரம் சிறப்பாக
அழகுசெய்யப்படுதல் இயல்பாதலின், அவ்வாறு அழகு செய்யப்பட்டாலல்லாமல் சிறப்புப்
பொருந்திய விஞ்சையருலகமும் இயற்கையழகமைந்த இந்நாட்டிற்கு ஒப்பாகாதெனச் சுரமை
நாட்டின் சிறப்பைக் கூறினார். இன்பவளத்தினும் செல்வநலத்தினும் சிறந்ததாகையால்
விஞ்சையருலகமும் எடுத்துக்காட்டப்பட்டது.

( 1 )

கயல்களும் கண்களும்
8. பங்கயங் காடுகொண் டலர்ந்த பாங்கெலாம்
செங்கய லினநிரை திளைக்குஞ் செல்வமும்
மங்கையர் முகத்தன மதர்த்த வாளரி
அங்கயற் பிறழ்ச்சியு மறாத 1நீரவே.
 
     (இ - ள்.) (இந்நாட்டில்) பங்கயம் - தாமரைகள் ; காடு கொண்டு - கூட்டமாகத்
தழைத்து; அலர்ந்த பாங்கு எலாம் - மலரப்பெற்ற நீர்நிலையின் இடங்களிலெல்லாம்;
செம்கயல் இனம் நிரை - செந்நிறமுள்ள கயல்மீன்களின் கூட்டமான வரிசையானது;
திளைக்கும் செல்வமும் - இனிது மகிழும் சிறப்பும்; மங்கையர் முகத்தன - மகளிரின்
முகத்திடத்தேயுள்ள; மதர்த்த - செழிப்புற்ற; வாள் அரி - ஒளியும் செவ்வரிகளுமுடைய;
அம்
 

     (பாடம்) 1. நுங்கள் போல்வார்.

     கயல் - அழகிய கயல்மீன்கள் போன்ற கண்களினது; பிறழ்ச்சியும் - பிறழ்தலும்;
அறாதநீர - எப்பொழுதும் நீங்காத தன்மையை உடையன, (எ-று.)