பக்கம் : 1201 | | ஒருபக்கத்தே நெருப்பிலிட்டுச் சிலரைப் பொரிப்பர்; கரிப்பர்; செக்குரலுட்பெய்து திரிப்பர்; உடலை உரிப்பர் என்க. | (828) | | 1939. | பழுப்பல பற்றிப் பறிப்பர் பதைப்ப மழுப்பல கொண்டவர் மார்பம் பிளப்பர் கழுப்பல வேற்றி யகைப்பர் கடிதே விழுப்பெரும் பூணோய் வினையின் விளைவே. | (இ - ள்.) பழு பல பற்றிப் பறிப்பர் - பலருடைய பழுவெலும்புகளைக் குறட்டாற்பற்றிப் பறிப்பார், மழுப்பல கொண்டு பதைப்ப அவர் மார்பம் பிளப்பர் - கோடரிகளைக் கைக்கொண்டு உடல் துடிக்கும்படி அந்நரகருடைய மார்பினைப் பிளப்பார், கழுப்பல ஏற்றிக் கடிதே அகைப்பர் - பலவாகிய கழு மரங்களிலே ஏற்றிக் கடுமையாக அழுத்துவர், விழுப்பெரும் பூணோய் - சிறந்த பெரிய அணிகலன்களையுடைய அரசே, வினையின் விளைவே - இவையெல்லாம் அவ்வவர் முன் செய்த தீவினைகளின் பயன் என்று அறிக, (எ - று.) பறிப்பர் பிளப்பர் அகைப்பர் இவை அவர்செய்த வினையின் பயன் என்றான் என்க. | (829) | | 1940. | பறிப்பர் பலரவர் கைகளைப் பற்றிச் செறிப்பர் விரல்களைச் சீவுவர் மேனி நெறிப்ப ரெலும்பு நிரந்துடன் வீழ மறிப்பர் மலைமிசை மற்று மொருசார். | (இ - ள்.) பலர் அவர் கைகளைப் பற்றி பறிப்பர் - பலர் அந்நரகர் கைகளைப் பிடித்து முறித்துப் பறிப்பார், விரல்களைச் செறிப்பர் - விரல்களை அழுத்தி நசுக்குவர், மேனி சீவுவர் - உடலின் கண்ணுள்ள தசையினை வாளாலே அரிவர், எலும்பு நெறிப்பார் - எலும்புகளை முறிப்பார், மற்றும் ஒருசார் - மேலும் ஒரு பக்கத்தே, நிரந்து உடன் வீழ - ஒருவர் பின் ஒருவர் நிரலாக வீழும்படி, மலைமிசை மறிப்பர் - மலையின் உச்சியிலிருந்து உருட்டுவர், (எ - று.) கரங்களைப் பற்றி இழுப்பவர், விரல்களை நசுக்குபவர், உடம்பைப் பிளப்பவர், எலும்பை முறிப்பவர், மலையிலிருந்து உருட்டுவோர் ஒருபால் இருந்தனர் என்க. | (830) | |
| | | |
|
|