பக்கம் : 1208
 

    

1953. நல்லறங் காய்ந்து நலிந்து பொருள்படைத்
தில்லறஞ் செய்யா திறுகு பவர்களும்
புல்லறம் புல்லாப் புலவரை வைதுரைத்
தல்லறஞ் செய்யு மறிவில் லவரும்
 
     (இ - ள்.) நல்லறம் காய்ந்து - உயரிய அறச்செயல்களை வெறுத்து, நலிந்து பொருள்
படைத்து - பிறவுயிர்கட்கு இன்னா செய்தும் தம்முடம்பு செற்றும் அதன்வழிப் பொருள்
ஈட்டி, இல்லறம் செய்யாது - இல்லறத்தார்க்குரிய அறங்களையும் செய்யாதவராய்,
இறுகுமவர்களும் - உலோபத்தால் வலிந்த மனத்தை யுடையோரும், புல்லறம் புல்லாப்
புலவரை - மற்நெறிச் செல்லாத அறிஞரை, வைதுரைத்து - வசைபேசி, அல்லறம் செய்யும்
- தீவினையே செய்கின்ற, அறிவில்லவரும் - பேதைகளும்,
(எ - று.)

     மறநெறியிலே பொருளீட்டுவோரும் அறஞ்செய்யாக் கயவரும் புலவரை வைவோரும்
அல்லறஞ் செய்யும் அறிவிலிகளும் (நரக கதி எய்துவர்) என்க.

(843)

 
1954. தெண்டிரை வாழுந் 1திமிலுங் கலங்களும்
2கொண்டிரை யாக வுயிர்கொல்லுஞ் சாதியும்
3கண்டிடு காதனை நின்னாற் செயப்படும்
தண்டிக டம்மொடுஞ் சார்த்தினை கொண்ணீ.
 
     (இ - ள்.) தெண்திரை வாழும் - தெளிந்த திரைகளையுடைய கடற்கரையிலே
வாழ்கின்ற, திமிலும் - தோணிகளையும், கலங்களும் - பெரிய மரக்கலங்களையும், கொண்டு
- கருவிகளாகக்கொண்டு, இரையாக - தமக்கும் பிறர்க்கும் இரையாகும் பொருட்டு,
உயிர்கொல்லும் சாதியும் - நீர்வாழும் உயிர்களைக் கொல்லாநின்ற பரதவர் முதலிய
வகுப்பினரையும், கண்டிடுகாதனை - சான்று முதலியவற்றால், ஆராய்ந்து காணப்பட்ட
கொலை முதலியவற்றால் நின்னாற் செய்யப்படும், தண்டிகள் - அரசனாகிய நின்னால் முறை
செய்து ஒறுக்கப்பட்டவர்களோடே, சார்த்தினை - கூட்டி, கொண்ணீ - அந்நரகில்
வீழ்வோராக நீ கொள்வாயாக, (எ - று.)

     காதனை - கொலை. திமில் முதலியவற்றால் மீன் முதலியவற்றைக் கொல்வோரும்
அரசராற் றண்டனை பெறற்குரிய கொலைஞரும் நரகில் வீழ்வார் என்க.

(844)

 

     (பாடம்) 1 திமிசுங். 2 கொண்டிசை. 3 கண்டசோதனை.