பக்கம் : 1209 | | | 1955. | ஆறா நரக வழலினு ளாழ்பவர் தேறார் திருவறந் தேறினு நல்வத மேறார் சிலர்நனி யேறினு நில்லலர் வேறா 1யினிச்சொல்ல வேண்டுவ துண்டோ. | (இ - ள்.) ஆறா நரக அழலினுள் ஆழ்பவர் - அவிந்தொழியாத நரகமென்னும் தீயினுள்ளே அழுந்தும் இந்நரகர்கள், திருஅறம் தேறார் - அருகனுடைய மேலான அறவுரைகளை அறிந்துணரமாட்டார், தேறினும் - ஓரோவழி உணர்வார் உளராயினும், நலவதம் ஏறார் - உயரிய விரதங்களில் நின்று ஒழுகுவாரல்லர், சிலல் நனி ஏறினும் - சிலர் அவ்விரதநெறிகளிலே ஒழுகினும், நில்லலர் - அந்நெறிக்கண் நிலைத்து நிற்பாரலர், வேறாய் இனிசொல்ல வேண்டுவதுண்டோ - இதுகாறும் கூறியவற்றின் வேறாக இன்னும் சொல்லவேண்டுமோ (வேண்டாவன்றே), (எ - று.) நரகர் ஒரோவழி அறந்தேறினும் அவ்வழி நிற்பாரல்லர் என்றபடி. | (845) | | விலங்குகதித் துன்பம் விலங்குகளின் வகை | 1956. | விலங்குடன் சாதி விரிப்பிற் பெருகும் உலங்கொண்ட தோண்மன்ன வோரறி வாதி புலங்கொண்ட வைம்பொறி 2யீறாப் புணர்ந்த நலங்கொண்ட ஞாலத்தி னாடி யுணர்நீ. | இது முதல 15 செய்யுள் ஒரு தொடர் (இ - ள்.) விலங்குடன் சாதி - விலங்குகளினுடைய வகைகளை, விரிப்பிற் பெருகும் - விரித்துரைக்கப் புகுவேமாயின், அதுமிகப் பெருகா நிற்கும் (ஆதலிற் சுருக்கமாகக் கூறுவோம்), உலங்கொண்டதோள் மன்ன - உலக்கல்லை யொத்த தோளையுடைய அரசனே, ஓர் அறிவு ஆதி ஐம்பொறி யீறாப்புணர்ந்த - அவை ஒன்றறிவுயிர் முதல் ஐந்து பொறியான் அறியும் ஐந்தறிவுயிர் இறுதியாகத் தொகைப்படுவனவாம், நலங்கொண்ட ஞாலத்தின் - அழகிய உலகினிடத்தே, நீ நாடி உணர் - நீயே ஆராய்ந்து அறிந்துகொள்க, (எ - று,) | |
| (பாடம்) 1 வினிச்சொல், வினிச்சொல. 2 யீறாய்ப் புணர்த்த. | | |
|
|