பக்கம் : 1210
 

     “ஒன்றறி வதுவே யுற்றறி வதுவே
     இரண்டறி வதுவே யதனொடு நாவே
     மூன்றறி வதுவே யவற்றொடு மூக்கே
     நான்கறி வதுவே யவற்றொடு கண்ணே
     ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
     ஆறறி வதுவே யவற்றொடு மனனே
     நேரிதி னுணர்ந்தோர் நெறிப்படுத் தினரே.Ó

     (தொல் - பொ. மரபியல் - 27)

     ஐயறிவுடையோர் மானிடருள்ளும் உளர் எனினும் அவரையும் விலங்கெனவேகொள்க.

(846)

 

ஒன்றறி வுயிர்த் துன்பம்

1957. நின்று வருந்து நிகோதப் பிறவியுள்
ஒன்றறி வெய்தி யுழக்கு முயிர்பல
அன்றிச் சிறிதுண் டவற்றினு மவ்வழிச்
சென்று பெயர்வ சிலவுள கண்டாய்.
 
     (இ - ள்.) நின்று வருந்தும் - நிலத்தின்கண் நிலைத்து நின்று வருந்தும் இயல்புடைய,
நிகோதப் பிறவியுள் - விலங்குப் பிறப்பினுள்ளே, ஒன்று அறிவு எய்தி - ஊறு
ஒன்றனைமட்டுமே அறியும் அறிவினை உடையனவாய், உழக்கும் உயிர்பல - மிகையாய
வெப்பதட்பங்களானும் வெட்டல் களைதல் முறிதல் சிதைதல் முதலியவைகளாலும் இன்னல்
எய்தும் உயிர்கள் சாலப்பலவாம், அன்றிச் சிறிதுண்டு அவற்றினும் -
ஒன்றறிவுயிரல்லாதனவும் சில அவ்வுயில்போல உளவாம், அவ்வழிச் சென்று பெயர்வ
சிலவுள கண்டாய் - அப்பிறப்பினுட் சென்று மீள்கின்ற வேறுபல உயிர்களும் இவற்றின்
வேறாய் உள, (எ - று.)

     எனவே, ஓரறிவுயிரும் அவற்றின் கிளைப்பிறப்பும் அப்பிறப்பினுட் சென்று மீளும்
பிறவும் ஓரறி வுயிர் என்றே கொள்ளற்பால என்பதாம். ஓரறிவுயிர் புல்லும் மரமுமுதலவாய
நிலையியற் பொருளாதலின் நின்று வருந்தும் நிகோதப் பிறப்பு என்றார். புல்லு மரனும்
“ஓரறிவுயிரே பிறவுமுளவே அக்கிளைப் பிறப்பேÓ என்னும் தொல்காப்பிய நூற்பாவும்
ஈண்டுணரற்பாற்று.

(847)

 

இதுவுமது

1958. ஓரறி வாகி யுழக்கு முயிர்களைப்
பேரறி வாரும் பிறரில்லை யின்னவை
யாரறி வாரழி யுந்திறம் யாதெனில்
கூரறி வில்லவர் கொன்றிடு கின்றார்.