பக்கம் : 1214
 

     எவ்வுயிர்கட்கும் செந்தண்மை பூண்டொழுகும் எம்மனோர்க்கே இத்துன்பங்கள்
உணரற்பாலன என்பதாம். பிறர் உணர்வாராயின் அவர் உடனே துறவின்கட் செல்வர்
என்றபடி.

(854)

 
1965. வலிய முழங்கினு நாறினும் வட்கி
நலியு 1மிவையென நையு மொருபால்
பலிபெறு தெய்வங்கண் மேலிட்டுப் பாற்றும்
கலியவர் கையுட் கழியு மொருபால்.
 
     (இ - ள்.) வலிய - தம்மின் வலிய விலங்குகள், முழங்கினும் - முழங்குதலைக்
கேட்டவிடத்தும், நாறினும் - தோன்றுதலைக் கண்டவிடத்தும், வடகி - ஒளி குன்றி, இவை
நலியும் என - இவ்விலங்குகள் நம்மைக் கொல்லுமே என்று, ஒருபால் - ஒருசார், நையும் -
துன்புழக்கும், பலிபெறும் தெய்வங்கள் மேலிட்டு - உயிர்ப்பலிகொள்ளும் தெய்வங்களைத்
தலைக்கீடாகக் கொண்டு, பாற்றும் - உயிர்போக்கும், கலியவர் - துன்பஞ் செய்வோருடைய,
கையுட் கழியும் ஒருபால் - கைகளிலே அகப்பட்டிறந் தொழியும் ஒரு பக்கத்தே, (எ - று.)

     நாறுதல் - தோன்றுதல். இனி, நாறுதல் - மணம் வீசுதல் என்று கொண்டு, வலிய
விலங்குகளின் நாற்றத்தை நுகர்ந்த விடத்தும் எனினுமாம்.

     வலிய விலங்குகளானும் எளியன கொல்லப்படும்; தெய்வத்தின் மேலிட்டும்
அறிவிலிகளாற் கொல்லப்படும் என்க.

(855)

 
1966. கண்களி னோக்கியுங் காதலி னுள்ளியும்
மண்க ளிடைவிட்டு வைகியும் புல்லியும்
தண்கமழ் தார்மன்ன தாயர் வளர்ப்புழி
எண்களை 2யின்றிட ரெய்து மொருபால்
 
     (இ - ள்.) தண்கமழ்ந்தார் மன்ன - குளிர்ந்த மணம் கமழ்கின்ற மாலையணிந்த
மன்னனே! தாயர் - தம்மையீனற தாய் விலங்குகள், கண்களில் நோக்கியும் - தம்
கண்களாலே கூர்ந்து பார்த்தும், காதலின் உள்ளியும் - அன்புடனே நினைந்தும்,
மண்களிடைவிட்டு - நிலங்களிலே ஆடவிட்டு, வைகியும் - தாமும் உடனிருந்தும், புல்லியும்
- தழுவியும், வளர்ப்புழி - வளர்க்கும் அவ்விளம் பருவத்தேயும், எண்களையின்று -
எண்ணிறந்த, இடர் எய்தும் ஒருபால் - துன்பங்களை நுகர்வனவாம் ஒரு பக்கத்தே,
(எ - று.)
 

      (பாடம்) 1 மிவை யென்னினையு. 2 யில்லா விடருற வீழும். பிடருள் வீழும்.