பக்கம் : 1218
 
  ஆவ ரவருண் மிலைச்ச ரவரையும்
வீவருந் தாரோய் விலங்கினுள் வைப்பாம்.
 
     (இ - ள்.) தீவினுள் வாழும் குமானுயர் - இனி மிலைச்சருள் வைத்துத் தீவுகளிலே
வாழும் குமானுயரும், தேசத்து மேவியுறையும் மிலைச்சரும் - தேசங்களிலே பொருந்தி
வாழ்கின்ற மிலைச்சர்களும், எனப்பெயர் ஆவர் - என இருவகைப் பெயர் கூறப்படுவர்,
அவருள் - அவ்விருவகையினருள், மிலைச்சர் அவரையும் - இரண்டாவதாகக் கூறப்பட்ட
தேசத்துறையும் மிலைச்சரையும், வீவரும் தாரோய் - மலராற்புனைந்த மாலையை உடைய
அரசனே, விலங்கினுள் வைப்பாம் - உருவானன்றி ஒழுக்கத்தால் வேற்றுமையின்மையால்
விலங்குகள் என்றே யாம் கொள்வோம், (எ - று.)

     குமானுயர் இருவகைப்படுவர்; அவருள் மிலைச்சர் உருவானே மானுடராயினும்
அறிவானே விலங்கென்றே கொள்ளப்படுவர் என்க.

     தீவு - மகாலவணம், கரளோதயம் என்னுங் கடல்களில் உள்ள தொண்ணூற்றாறு
அந்தரத் தீவுகள்.

     “வாரியுட் டீவு தொண்ணூற்றாறு மற்றைக் கண்டத்தும்
     சேருநர் அறத்தைச் சேரார் மிலேச்சராய்ச் செய்யப் பட்டார்Ó

என்பது மேருமந்தரபுராணம் (1227).

(863)

 
1974. வாலு நெடியர் வளைந்த வெயிற்றினர்
காலுமொ ரோவொன் றுடையர் 1கலையிலர்
நாலுஞ் 2செவியர் நவைசெய் மருப்பினர்
சீல மடைவிலர் தீவினுள் வாழ்வார்.
 
      (இ - ள்.) தீவினுள் வாழ்வார் - தீவுகளிலே வாழ்கின்ற குமானுயர் என்னும்
மனிதர்கள், வாலும் நெடியர் - நீண்ட வாலுடையரும், வளைந்த எயிற்றினர் - கோரப்
பற்களையுடையவரும், காலும் ஒரோ ஒன்று உடையர் - கால் என்னும் உறுப்பும்
ஒவ்வொருவர் ஒவ்வொன்றே யுடையரும், கலையிலர் - ஆடை அணியாதவரும், நாலும்
செவியர் - நீண்டு தூங்கும் காதுகளை யுடையவரும், நவைசெய் மருப்பினர் - பிறவுயிர்கட்கு
இன்னல் செய்கின்ற கொம்புகளையுடையவரும், சீலம் அடைவிலர் - ஒழுக்கமில்லாதவரும்
ஆவர், (எ - று.)

     கோலமி னோன்றற் குமானுயர் தம்மையும் கூறுவன்கேள்
     வாலமும் கோடும் வளைபல்லும் பெற்ற வடிவினராய்ச்
     சீலமும் காட்சியும் தீண்டலர் அந்தரத் தீவினுள்ளார்
     நீலமும் வேலும் கயலும் நிகர்த்த நெடுங்கண்ணினாய்.

என்றார் நீலகேசியினும் (தருமவு - செய் - 76)

(864)

 

     (பாடம்) 1 ருடையிலர். 2 செவியினர்.