பக்கம் : 1221
 

     நலமில்லவரும் (1978) அஞ்சு கலந்துண்பித்தோரும் உயர்ந்தோர் விலக்கியவற்றைச்
செய்வோரும் என்று கூட்டுக.

(869)

 
1980. அன்ன பிறவியு ளாங்கவ ராபவர்
இன்னுஞ் சிலவ ரிழிகதிப் 1பாற்பட்டுத்
துன்னிய போழ்தே சுருங்கி யொழிபவர்
என்னும் பிறர்க ளறிவிற் கிகந்தார்.
 
     (இ - ள்.) அன்ன பிறவியுள் - அம்மிலைச்சர் பிறப்பினுள், ஆங்கு அவராபவர் -
அவ்விடங்களிலே யாம் முன் கூறியவர்கள் பிறப்பர், இன்னும் சிலவர் - வேறு சிலரும்,
இழிகதிப்பாற்பட்டு - இவ்விழிந்த மிலைச்சர் பிறப்பிற் பிறந்து, துன்னிய போதே -
அப்பிறவியை எய்திய பொழுதே, சுருங்கி - வாழ்நாள் குறுகி, ஒழிபவர் - இறப்பார்,
என்னும் பிறர்கள் அறிவிற்கு இகந்தார் - (இவர் யாரோ எனில்) எவ்வாற்றானும் பிற
சான்றோர் அறிவுரைகளைக் கடந்தவர், (எ - று.)

     செய்வோரும் அன்னபிறவியுள் ஆபவர் எனமுடிக்க. வேறு சிலர் இப்பிறப்பிற் பிறந்து
சின்னாளில், இறந்து மீள்வர் என்க.

(870)

 
1981. மக்கள் 2வதியு மிரண்டரைத் தீவினுள்
தக்க நிலத்துப் பிறந்தவர் தம்முளும்
முக்குலத் தாரொடுங் கூடா முயற்சியர்
3ஒக்கலைப் போல்வார் பலரு முளரே.
 
     (இ - ள்.) மக்கள் வதியும் இரண்டரைத் தீவினுள் - மனிதர் வாழ்தற்குரிய
இரண்டரைத் தீவுகளிலும், தக்க நிலத்து - சிறந்த நாடுகளிலே, பிறந்தவர் தம்முளும் -
பிறந்த மனிதருள்ளும், முக்குலத்தாரொடு கூடா முயற்சியர் (சேகரும் மிலைச்சரும் ஒழிந்த
மனிதரும் திப்பியரும் போகரும் ஆகிய) மூன்று குலத்தினுட் டோன்றியும், அவர்தம்
ஒழுக்கத்தோடு பொருந்தாத தீச் செயலை உடையராய், ஒக்கலைப் போல்வர் - பிறப்பானும்
தோற்றத்தானும் மட்டுமே அவர்க் கினம் போன்றவராய், பலரும் உளர் - பற்பலர் இருப்பர், (எ - று.)
 

     (பாடம்) 1 பாற் படுத். 2 உறையு. 3 ஒக்கிலைப்.