பக்கம் : 1223 | | இல்லை அமர்ந்துழி - இல்லிலிருந்து செய்யும் அறத்தை விரும்பும் இயல்புடைய தாய் தந்தையரிடத்தே என்றபடி. உலகில் ஒழுக்கமின்றி விலங்குபோல மனித வகுப்பினர் இருத்தலால் அவ்வகுப்பிற் பிறவாமல் இல்லற முதலியவற்றை வரைந்து வாழும் வகுப்பிடைப் பிறத்தலும் அரிதென்க. | (873) | | 1984. | அண்ணை யலிகுரு டாதி யவர்களை மண்ணுயர் ஞாலத்து 1மானுட ராகவைத் தெண்ணுநர் யாருள ரெல்லா மமையினும் பெண்ணின் பிறவியும் பீடுடைத் தன்றே. | (இ - ள்.) அண்ணை அலி குருடு ஆதியவர்களை - மருள்பேடு குருடு முதலிய பிறப்பினர் ஆகியவர்களை, மண் உயர் ஞாலத்து - மண் திணிந்துயர்ந்த உலகத்தே, மானுடராக வைத்து - மனிதர் என்று, எண்ணுநர் - கருதுவார், யார் உளர் - யாரே இருக்கின்றனர், எல்லாம் அமையினும் - நல்ல நில முதலிய எல்லா நன்மைகளும் அமையப் பெற்றுத் தோன்றிய விடத்தும், பெண்ணின் பிறவியும் பீடு உடைத்தன்று - பெண்ணாய்ப் பிறக்கும் பிறப்பும் பெருமை உடையதாகாது, (எ - று.) பெண்ணின் பிறப்புப் பீடுடைத்தன்று, என்று கோடல் சைனர்கள் கொள்கை என்க. | (874) | | 1985. | எண்பத்து நான்கெனு நூறா யிரமுள பண்பொத்த சாதிப் 2பவமென்ப மற்றவை 3கண்பற்றுந் தாரோய் களிப்பதொர் நல்வினைத் திண்பற் றுடையவ ரிவ்வுடல் சேர்வார். | (இ - ள்.) பண்பு ஒத்த சாதிப் பவம் - பிறப்பிறப்பு முதலியவற்றில் ஒரு தன்மையவாய்ப் பலவகைப்பட்ட பிறப்புக்கள், எண்பத்து நான்கு எனும் நூறாயிரம் உள என்ப - எண்பத்து நான்கு நூறாயிரம் வகையின என்று அறிஞர் கூறுவர், மற்றவை - அவையிற்றுள், கண்பற்றும் தாரோய் - கண்ணைக் கவரும் அழகுடைய மாலையணிந்த மன்னனே, களிப்பதோர் நல்வினை - தாமும் பிறரும் மகிழ்தற்குக் காரணமான நல்லறங்களிலே, திண் பற்று உடையவர் - திண்ணிய விருப்பம் உடைய நல்லோரே, இவ்வுடல் சேர்வர் - இம்மானிட நல்லுடல் எய்தற் பாலார், (எ - று.) எண்பத்து நான்கு நூறாயிரம் வேற்றுமையுடைய பிறப்புக்களிலே வைத்து மானிடராதல் அரிது, அப்பிறப்பு நல்வினையாலேயே எய்தப்படும் என்க. | (875) | |
| (பாடம்) 1 மானுய. 2 பிறவியள். 3 கண்பற்று. | | |
|
|