பக்கம் : 1224
 
 
1986. சார்ந்த பொழுதே தலைநாட் கருவினுள்
வார்ந்து வழுவா தமைந்து 1வளரினும்
ஈர்ந்தண் கமழ்நறுந் தாரோ யிடர்பல
கூர்ந்து 2வருபயாங் கூற வுலவா.
 
     (இ - ள்.) சார்ந்த பொழுதே - உயிர்கள் இவ்வுடலிற் பொருந்திய அப்பொழுதே,
தலைநாட் கருவினுள் - அம் முதல் நாளிலேயே கருப்பையுணின்று, வார்ந்து - ஒழுகி,
வழுவாது - (வழுவினும் வழுவும்) கெடாது, அமைந்து - அப் பையுட் பொருந்தி, வளரினும்
- வளர்ந்தாலும், ஈர்ந்தண் கமழ் நறும் தாரோய் - ஈரமுடைமையோடு குளிர்ந்து
மணங்கமழும் நல்ல மலர்மாலையை அணிந்த மன்னனே, இடர் பல கூர்ந்து வருப -
பல்வேறு துயர்களை நுகர்ந்தே வருவனவாகும், யாம் கூறவுலவா - அவையிற்றை யாம்
விரித்துக் கூற வெனில் முடிவு பெறாவாம், (எ - று.)

     அம் மானுடப் பிறப்பில் கருவிற்பட்டவுடனே அழிதலும் உண்டு. அழியாது
வளருமிடத்தும் இடர்பல வுள என்க.

(876)

 
1987. குழவி யருஞ்சுரஞ் சென்று குமர
வழுவ 3வடவி யரிதி னிகந்தால்
கிழவெனு மெல்லை கெழீஇயினர் சார்ந்து
வழுவினர் செல்வது மற்றோர் கதியே.
 
     (இ - ள்.) குழவி அருஞ்சுரம் சென்று - குழவிப்பருவம் என்னும் கடத்தற்கரிய
பாலைநிலத்தைக் கடந்து, குமர அழுவ அடவி - இளமைப் பருவம் என்னும் ஆழ்ந்த
குழிகள் அமைந்த காட்டினை, அரிதின் இகந்தால - அரிதிற்சென்று கடந்தால், கிழவு எனும்
எல்லை கெழீஇயினர் சார்ந்து - கிழப்பருவம் என்னும் எல்லையை அண்மி அடைந்து,
வழுவினர் - அப்பருவத்தினின்றும் அகன்று இறந்தவர்கள், செல்வது மற்றோர் கதி -
அடைவது வேறு பிறப்பாம், (எ - று.)

     இவ்வாறே பிறவி உருளையிற் சுழலும் உயிர் என்பதாம்.

(877)

 
மக்கள் நுகரும் இன்பத் தியல்பு
1988. 4ஆனை துரப்ப வரவுறை யாழ்குழி
நானவிர் பற்றுபு நாலு மொருவனோர்
5தேனி னழிதுளி நக்குந் திறத்தது
மானுய ரின்ப மதித்தனை கொண்ணீ.
 

     (பாடம்) 1 வளரிவை. 2 வருவன வுரைப்பன வுலவா 3 வடவை. 4யானை.

     5தேனெய் யழிதுளி நக்கி யனையது.