பக்கம் : 1228
 

ஏற்பவர்க்கு ஏற்ற குணம்

1994. துறவி யடக்கை 1பிறர்க்குநன் றாற்றல்
உறவினர்க் கோம்புதன் மெய்த்தலைப் பாடென்
றறிவ ரறைந்தாங் கறைந்தனன் றானங்
குறைவில னேற்பவற் கேற்ற குணனே.
 
     (இ - ள்.) துறவி - துறவுடைமை, அடக்கை - அடக்கமுடைமை, பிறர்க்கு நன்று
ஆற்றல் - பிறர்க்கு இனிய செய்தல், உறவினர்க்கு ஓம்புதல் - சுற்றத்தாரைப் பேணல்,
மெய்த் தலைப்பாடு - மெய்யுணர்தலிற் றலைப்படுதல், என்று அறிவர் அறைந்தாங்கு
அறைந்தனன் - எனச் சான்றோர் - கூறியவாறே யான் உனக்குக் கூறாநின்றேன், தான்
அங்கு உறைவிலன் - ஈவோனிடத்துத்தான் சென்று உறைதலிலனாய், ஏற்பவற்கு -
இரப்பவனுக்கு, ஏற்ற குணனே - தகுந்த குணங்களை, (எ - று.)

     துறவி - துறவு.

     இரப்பவன் துறவு முதலிய குணங்கள் உடையனாதல் வேண்டும்
என்பதாம்.

(884)

 

ஈவோற்குரிய குணங்கள்

1995. 2போதிசை வாற்றல் பொன்று தறுகட்பம்
ஈதற் கிவறுத லேற்பவர் மாட்டெழு
காதல் கழிபற்றி லாமை தெரிந்தறி
வேதமின் றீவான் குணமிவை யேழே.
 
     (இ - ள்.) போது இசைவு - காலத்திற்கியைதலும், ஆற்றல் - ஈதற்கு வேண்டிய
ஆற்றலுடைமையும், பொன்று தறுகட்பம் - வன்கண்மை யில்லாமையும் (கண்ணோட்டம்
உடைமையும்), ஈதற்கு இவறுதல் - வழங்குதற்கு வேணவா உடைமையும், ஏற்பவர் மாட்டு
எழு காதல் - இரப்போரிடத்துச் செல்லும் அன்புடைமையும், கழிபற்றிலாமை - தம்
பொருளிடத்தே மிகையாய பற்றின்மையும், தெரிந்து அறிவு - குறிப்பால் அறிந்துணர்தலும்,
ஏதமின்று ஈவான்குணம் - குற்றமில்லாமல் வழங்குபவனுக்கு வேண்டிய குணங்கள், இவை
ஏழே - இவ்வேழுமாம்,
(எ - று.)

     பொன்றுதறுகட்பம் என்றது தறுகண்மையின்மையை; எனவே
கண்ணோட்டமுண்மையும் என்றவாறு.

     “காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
     ஞாலத்தின் மாணப் பெரிது,Ó
 

     (பாடம்) 1 பிற்றக. 2போது செய்தாற்றல். சூ - 78