பக்கம் : 1230
 

     (இ - ள்.) கடை நின்றவர் உறுகண் கண்டு இரங்கி - தன் வீட்டு வாயிலில்
நின்றவர்களின் இன்னலைக் காணுங்கால் மிக்க இரக்கங்கொண்டு,
உடைய தம் ஆற்றலின் உண்டி கொடுத்தார் - தம்முடைய தாளாற்றித் தந்த பொருளாகிய
உணவை இன்னலுறும் அவர்கட்கு வழங்குவோர், படைகெழு தானைய - போர்க்கருவிகள்
மிக்க படையின் கண்ணவாகிய, பல்களியானை - பலவாகிய களிப்பு மிக்க யானைகளோடே,
குடைகெழு - திங்கள் வெண்குடைகளையும் மிக்குடைய, வேந்தர்கள் ஆகுவர் -
மன்னர்களாய்ப் பிறப்பார்கள், வேந்தே - மன்னனே, (எ - று.)

     வறியார்க்கு உண்டி கொடுத்தோர் மன்னராய்த் தோன்றுவர் என்க.

(887)

 

தீயவர்க்கு தானம் செய்தலால் வரும் தீமை

1998. ஊறு பலசெய் 1துயிர்கட் கிடர்செய்யும்
வீறில் பொருளை வினையவர்க் கீந்தவன்
ஏறும் பயனிஃ தென்றினி யான்சொல்லின்
நாறிணர்த் தாரோய் நகுவ துடைத்தே.
 
     (இ - ள்.) உயிர்கட்கு - பிறவுயிர்களுக்கு, ஊறு பல செய்து - இடையூறு பலவற்றைச்
செய்து ஈட்டிய, இடர் செய்யும் வீறு இல்பொருளை - (தனக்கும் பிறர்க்கும் துன்பத்தையே
விளைக்கும்) சிறப்பில்லாத பொருளை, வினையவர்க்கு ஈந்தவன் - தீவினையாளர்க்கு
வழங்கிய ஒருவன், ஏறும் பயன் இஃதென்று - எய்தி நுகரும் நுகர்ச்சி இத்தன்மைத்தென்று,
இனி யான் சொல்லின் - இனி யான் உனக்குக் கூறுவேனாயின், நாறு இணர்த்தாரோய் -
நறுமணங்கமழும் மாலையை அணிந்த அரசனே, நகுவது உடைத்தே - அக்கூற்று
நகைச்சுவை விளைப்பதொன்றாயிருக்கும், (எ - று.)

     “அடங்கலர்க் கீந்த தானப் பயத்தினால் அலறு முந்நீர்த்
     தடங்கட னடுவுட் டீவு பலவுள வவற்றுட் டோன்றி
     யுடம்பொடு முகங்க ளொவ்வா ரூழ்கனி மாந்தி வாழ்வர்
     மடங்கலஞ் சீற்றத் துப்பின் மானவேன் மன்ன ரேறே“. (சீவகசிந் - முத்தி - 244)

     என்பதனானும் தீயோர்க்குச் செய்யும் தானத்தால் வருந்தீமையை உணர்க.

(888)

 
இதுவுமது
1999. தன்கைப் பொருளு மிழந்து தனக்கொரு
புன்கட் கதிசெல்லும் வாயில் புணர்ப்பவன்
 

     (பாடம்) 1 துயிர்க்கிடர் செய்யும்.