பக்கம் : 1232
 
 விரதத்தின் வகை
2001. மிக்க விரதம் 1விரிபல வாயினும்
தொக்கன 2வைந்திற் சொலுமூன்றி னான்கினில்
ஒக்க வவற்றி 3னுறுபயஞ் 4சொல்லிடில்
தக்கவர்க் 5கொத்ததிற் றன்னங் குறைவே.
 
     (இ - ள்.) மிக்க விரதம் விரிபல ஆயினும்- பயன்மிகுந்த விரதங்களை விரித்துக்
கூறுமிடத்தே பற்பலவாக விரியும் ஆயினும், சொலும் ஐந்தில் மூன்றில் நான்கில் தொக்கன
- சொல்லப்பட்ட ஐந்து விரதங்கள் என்றும் மூன்று விரதங்கள் என்றும் நான்கு விரதங்கள்
என்றும் அவை தொகுக்கப்பட்டுள்ளன, ஒக்க அவற்றின் உறுபயன் சொல்லிடில் -
அவையிற்றால் பொருந்தும் பயனையும் உடன் கூறின், தக்க அவர்க்கு ஒத்து - ஐந்தும்
நான்கும் மூன்றுமாகிய இவைகளை ஏற்றுக்கொள்ளும் தகுதியுடையார் தன்மைக்குப்
பொருந்தி, அதில் - அப்பயனானும், தன்னம் - சிறிது, குறைவே - குறைவுடையனவாம்,
(எ - று.)

     இல்லறத்தார்க்குரிய விரதங்கள்:- அணுவிரதம், குணவிரதம், சிக்கை விரதம் என
முத்திறப்படும். அவற்றுள், அணுவிரதம்:- ஐந்து வகைப்படும். அவையாவன:- இன்னா
செய்யாமை, வாய்மை, வெஃகாமை, பிறன்மனை பேணாமை, வரையறையுடைமை என்பன.
குணவிரதம்:- திக்குவிரதம் அநர்த்ததண்ட விரதம் போகோப போகபரிமாணம் என மூன்று
வகைப்படும். சிக்கைவிரதம்:- தேசாவகாசிகம், சாமாயிகம், புரோடதோபவாசம், அதிதி பூசை
என நால்வகைப்டும், இவற்றின் உட்பிரிவுகளை விரிப்பிற் பெருகும், விரிந்த நூல்களுட்
காண்க.

(891)

 
கொல்லா விரதத்தின் சிறப்பு
2002. எல்லா விரத மியல்பொக்கு மாயினும்
அல்லா விரத மனையா 6யவர்கட்குக்
கொல்லா விரதங் குடைமன்ன 7வாமெனின்
வெல்லா வகையில்லை வீங்கெழிற் றோளாய்.
 
     (இ - ள்.) எல்லா விரதம் இயல்பு ஒக்குமாயினும் - இவ்வாறு கூறப்பட்ட விரதங்கள்
எல்லாம் நன்மையளிப்பதில் ஒத்த தன்மையுடையவே ஆயினும், விரதம் அல்லா -
விரதங்கள் அனைத்தையும் ஒருங்காற்றும் ஆற்றல் இல்லாத, மனையாயவர்கட்கு -
இல்லறத்தார்க்கும், வீங்கெழிற்றோளாய் குடை மன்ன! - பருத்த அழகிய தோளை
யுடையவனான வெண்குண்டைவேந்தனே, கொல்லாவிரதம் ஆம் எனின் - கொல்லாமை
என்னும் விரதம் ஒன்றையேனும் குறிக்கொண்டு மேற்கோடல் ஆகுமாயின், வெல்லா
வகையில்லை - அவ்வில்லறத்தார் வென்றொழிக்க வியலாத தீவினை வேறு பிற இல்லை,
(எ - று.)
 

     (பாடம்) 1 வடிவுபல. வரிபல. 2 ஐந்தினும் மூன்றினும் நான்கினும்.

     3 னுறுபயன். 4 சொல்லினும். 5 கோதத்த. 6 லவர்கட்கு. 7 வாமேனின்.