பக்கம் : 1236 | | எழுவகை அறவாயில்கள் | 2008. | அருளுந் தெருளுங் குணத்தின்க ணார்வமும் பொருளொன்று 1சேரும் புகழ்ச்சி 2நிகழ்வும் 3மருளி றவமும் வாலிய ஞானமும் 4இருளறு தியான நிகழ்வுமென் றேழே. | (இ - ள்.) அருளும் - அருளுடைமையும், தெருளும் - அறிவுடைமையும், குணத்தின்கண் ஆர்வமும் -உயரிய குணங்களை விழைதலும், பொருள் ஒன்று சேரும் புகழ்ச்சி நிகழ்வும் - மெய்யுணர்ச்சி உண்டாதற்குரிய புகழ்ச்சி நிகழ்வும், மருள் இல் தவமும் - அறியாமையில்லாத தவமும், வாலிய ஞானமும் - தூய்தாகிய அறிவும், இருள் அறு தியான நிகழ்வும் - மயக்கம் அறுதற்குரிய தியான நிகழ்வும், என்று ஏழே - என்று ஏழு வாயில்களும் வேறுள்ளன, (எ - று.) முன்னர்க் கூறிய நான்கேயன்றி அருள் முதலிய இவ்வேழும் அற வாயில்களாம் என்க. | (898) | | அருளுடைமை | 2009. | ஆருயிர் யாதொன் றிடருறு மாங்கதற் கோருயிர் போல வுருகி யுயக்கொள்ள நேரி னதுமுடி யாதெனி னெஞ்சகத் தீர முடைமை யருளி னியல்பே. | (இ - ள்.) யாதொன்று ஆர்உயிர் இடருறும் - யாதானும் ஓர் உயிர் இடுக்கண் உறக்கண்டால், ஆங்கு அதற்கு - அப்பொழுது அவ்வுயிர்க்கு, ஓர் உயிர்போல உருகி - தன்னுயிர்க்கு இடுக்கண் வரும்போது உருகுமாப்போல இரக்கத்தான் உருகா நின்று, நேரின் உயக்கொள்ள- இயலுமாயின் அவ்விடுக்கண் தீர்த்து அதனைக் காப்பாற்றுக, அது முடியாது எனில் - அவ்வாறு காப்பாற்ற வியலாத விடத்தும், நெஞ்சகத்து ஈரம் உடைமை - தன் நெஞ்சத்தே இரக்கம் உடையனாதல், அருளின் இயல்பே - இத்தன்மை யுடைமையே அருள் உடைமையாம், | |
| (பாடம்) 1 சேர்வும். 2 நிகழ்ச்சி. 3 மருளும் தவத்தொடு ஞான நிகழ்ச்சி. 4 இருளின றியான் நிகழ்ச்சியென் றேழே. | | |
|
|