பக்கம் : 1237
 

      பிறவுயிர் துன்புறக் காணில் அத்துன்பத்தை அகற்றி அவையிற்றை உய்யக் கோடலும்
இயலாத விடத்து இரக்கமுடையனாதலும் அருளுடையான் தன்மை என்க.

(899)

 

தெருளின் திறம்

2010. வையினும் வாழ்த்தினும் வாளா விருப்பினும்
வெய்ய 1முனிதல் குளிர்தல் வெறுப்பொடு
மையன்மும் 2மூடப் பகுதி மயக்கின்மை
செய்ய மனத்தோர் 3தெருளின் றிறமே.
 
     (இ - ள்.) வையினும் - பிறர் தம்மை வசைகூறிய போதும், வாழ்த்தினும் - அன்றிப்
புகழ்ந்து வாழ்த்தியபோதும், வாளா விருப்பினும் - இரண்டுமன்றி வாளாவிருக்கும்போதும்,
வெய்ய முனிதல் குளிர்தல் வெறுப்பொடு முறையே வெவ்வியவாகச் சினத்தலும் மகிழ்தலும்
வெறுத்தலும் ஆகிய இம்மூன்றோடும், மையல் -மயக்கமின்மையும், மும்மூடப்பகுதி மயக்கு
இன்மை - மூன்று மூடப்பகுதிகளால் மயக்கப்படாமையும், செய்ய மனத்தோர் -
செம்மையுடைய நெஞ்சுடைய சான்றோர்களுக்குரிய, தெருளின்திறம் - தெருள் என்பதன்
தன்மையாம், (எ - று.)

     மையல் - மோகவனீயகர்மங்கள். மும்மூடப் பகுதி :- உலக மூடம் பாசண்டிமூடம்
தேவமூடம் என்பன.

     பிறர் தம்மை வைத விடத்தும் வாழ்த்திய விடத்தும் நிரலே விருப்பும் வெறுப்புமின்றி
நெஞ்சம் சமனிலையினிற்றலும் மயக்கின்மையும், மும்மூடப் பகுதியின்மையும் தெருள்
எனப்படும் என்க.

(900)

 
ஆர்வமுடைமை
2011. அறிவ ரடிமுத லார்வம் பெருக்கல்
உறுவ ரொழுக்க முவத்தன் முதலா
இறிதியில் பல்குண நோக்கமென் றின்ன
செறிதலி லார்வங்கள் செல்வந் தருமே.
 
     (இ - ள்.) அறிவர் அடிமுதல் - அருகக்கடவுளின் திருவடிகளிலே, ஆர்வம் பெருக்கல்
- மிக்க அன்புடைமை, உறுவர் ஒழுக்கம் உவத்தல் - துறவிகளையும் அவர்தம்
ஒழுக்கங்களையும் அவாவுதல், முதலா - முதலியனவாக ஓதப்பட்ட, இறுதியில்
பல்குணநோக்கம் - கேடில்லாத பலவாகிய உயரிய பண்புகளைக் குறிக்கொள்ளல், என்று
இன்ன - என்ற இத்தன்மைகள், செறிதலில் ஆர்வங்கள் - ஆர்வஞ் செய்தற்குரியாரைக்
கண்டவிடத்து அடங்காதே புறம்போந்து பூசல்தரும் இயல்புடைய ஆர்வங்களாம், செல்வந்
தரும் - இவ்வார்வமுடைமை விழுச் செல்வத்தை நல்கும், (எ - று.)
 

     (பாடம்) 1 முனியல். 2 மணிமுட. 3 தெளிவின்.