பக்கம் : 1239
 

     (இ - ள்.) அற்ற துவர்ப்பினர் ஆகும் - ஆசியம் முதலிய அறுவகைத் துவர்ப்புகளும்
அற்றவராகும், அருநிலை - நிற்றற்கரிய இவ்வுயர்ந்த நிலைக்கண், உற்றவர்க்கு -
பொருந்தியவர்கட்கு, இவ்வாறு ஒழுக்கம் தலைநிற்றல் - இவ்வண்ணமாக நல்லொழுக்கத்தே
சிறந்து நிற்றலே, நற்றவம் என்று - நல்ல தவம் என்று, நாங்கள் மொழிந்தது யாம்
கூறியதாம், மன்னா மற்றிது வான் உலகு ஆள்விக்கும் - அரசனே! இத்தவமுடைமை
தேவருலகத்தை ஆளும்படி செய்யும், (எ - று.)

     அறுவகைத் துவர்ப்பாவன :- ஆசியம் இரதி அரதி சோகம் பயம் சுகுத்சை என்பன.

(903)

 

மெய்யறிவு

2014. நூற்பொருள் கேட்டு நுனித்தோ 1ருணர்வது
மாற்படை கூட்டு மயங்கிரு டீர்ப்பது
மேற்படை மெய்ம்மை விளக்கும் விளக்கது
நாற்படை யோய்நல்ல ஞான நிகழ்வே.
 
     (இ - ள்.) நாற்படையோய் - நான்குவகைப் படைகளையும் உடைய வேந்தனே,
ஞானநிகழ்வே - ஞானநிகழ்வு என்று சொல்லப்படுவது யாதெனில், நூற்பொருள் கேட்டு -
மெய்ந்நூலாகிய பரமாகமத்தில் அருகனாற் கூறப்பட்ட மெய்ப்பொருளை நல்லாசிரியர்பால்
கேட்டறிந்து, நுனித்தோர் - ஆராய்ந்த சான்றோரால், உணர்வது - தெளியப்படுவது,
மால்படை கூட்டும் மயங்கு இருள் தீர்ப்பது - பெரிய இன்னல்களைக் கூட்டுகின்ற
மயங்குதற்கு ஏதுவாகிய அறியாமை இருளை அகற்றுவது, மேற்படை மெய்ம்மை விளக்கும்
விளக்கது - மேம்பாடுடைய செம்பொருளைக் காட்டும் விளக்குப் போன்றது, (எ - று.)

     மெய்ப்பொருள் கேட்டு நுனித்தோர் உணர்வது, மயக்கு அகற்றுவது ; மெய்ம்மை
விளக்குவது ; ஞான நிகழ்வாம் என்க.

(904)

 
தியானம்
2015. சென்று பெருகுந் தியான நிகழ்ச்சியும்
ஒன்ற வுரைப்பி னொருநால் வகைப்படும்
நன்றியின் 2மாற்றினை நல்குமிரண் டல்லன
வென்றி விசும்பொடு வீடுந் தருமே.
 
     (இ - ள்.) சென்று பெருகும் தியான நிகழ்ச்சியும் - பயிலும் தோறும் உயர்ந்து
பெருகும் தன்மைத்தாய தியானநிகழ்ச்சி தானும், ஒன்ற உரைப்பின் பொருந்தக் கூறுங்கால்,
ஒருநால் வகைப்படும் - நான்கு பகுதித்தாம், இரண்டு
 

     (பாடம்) 1 ருணாவது. 2 மாற்றுத் தருமிரண் டல்லவை.