பக்கம் : 1243
 

     ஆராய்ந்து மீண்டும் இவ்வுலகத்தே பிறவாமைக்கு ஏதுவாகிய துறவறத்தே தலைநின்ற
சிறப்பை எய்தியவரும், இவ்வுலகினுள் உத்தமர் - இம்மண்ணுலகத்திலேயே வாழும்
தீர்த்தங்கரர் ஆவர், தார் தங்குமார்ப - மாலைமார்பனே, மற்றவர் - அவ்வுத்தமர்கள்,
தவத்தின் வருவர் - முற்பிறவிகளிலே ஆற்றிய தவப்பயனால், இவ்வுயரிய பிறப்பிலே
தோன்றுவார், (எ - று.)

     தீர்த்தம் - பரமாகமம் தீர்த்தம் சிறப்போரும், பேர்த்துப் பிறவாப் பெருமை
பெறுவோரும் தீர்த்தங்கரர் ஆவர். இவர்கள் தவப்பயனாலே பிறந்தோர் என்க.

(912)

 

வேறு

2023. தக்கமிகு தானமுத லாயதலை நிற்கும்
மக்களிவ ராவர்மத யானைமற வேலோய்
புக்கவரு ளேபடுவர் போகநிலஞ் சார்ந்தார்
ஒக்கவவர் தன்மையு முரைக்கவுல வாவே.
 
     (இ - ள்.) தக்க மிகுதானம் முதலாய தலைநிற்கும் - தகுதியுடைய மிக்க தானம்
முதலியவற்றுள் சிறப்புடையோராய் ஒழுகும், மக்கள் இவராவர் - மனிதர்கள் இவர்கள்
ஆவார், மதயானை மறவேலோய் - மதமிக்க யானைகளையும் ஆற்றல் மிக்க வேலையும்
உடைய வேந்தே, புக்கு அவருளே படுவர் - புகுந்து அப்போக மனிதருள் பிறப்பர்,
போகநிலம் சார்ந்தார் - அப்போக பூமிகளிலே வதிவாராகிய, அவர் தன்மையும் ஒக்க
உரைக்க - அவர்கள் பெருமையும் பொருந்தக் கூறுவோமெனில், உலவாவே -
கடைபோகமாட்டா, (எ - று.)

     தானம் முதலிய புண்ணிய வாயில்களை மேற்கொண்டு ஒழுகுபவரே போக
நிலங்களிலே சென்று பிறப்போர் என்க.

(913)

 
2024. உத்தமர்க ளேனையிடை யோர்கள்கடை யோரம்
முத்தகைய ராவரவர் மூரிநெடு வேலோய்
பத்துவகை 1மாதவ மியற்றிய பயத்தால்
அத்தகைய செய்கையு மவர்க்கனைய கண்டாய்.
 
     (இ - ள்.) மூரி நெடுவேலோய் - வலிய நீண்ட வேற்படையையுடைய மன்னனே !,
உத்தமர்கள் ஏனை இடையோர்கள் கடையோராம் - தலையாயவரும் ஒழிந்த
இடையாயவரும் கடையாயவரும் என்னும், முத்தகையர் ஆவர் அவர் - மூன்று வகையினர்
ஆவர் அப்போகமனிதர், பத்துவகை மாதவம் இயற்றிய பயத்தால் - தலைப்பொறை முதலிய
பத்துவகை அறவொழுக்கமுடைய சிறந்த தவத்தைப்புரிந்த பயனாலும், அத்தகைய செய்கை -
அவ்வாறாய செயல்களானும் வேற்றுமை யுண்மையின், அனைய அவர்க்கு கண்டாய் -
அத்தகைய மூவகைப் பாகுபாடுகள் உளவாயின அவர் தம்முள், (எ - று.)
 

     (பாடம்) 1 பாதவம்.