(இ - ள்.) அவண் - அப்போக பூமியிலே, கங்குல் இல்லை - இராப்பொழுது இல்லை, கலி இல்லை - நல்குரவு இல்லை, நலிவு இல்லை - இன்னலில்லை, அங்கு - அப்போகபூமியில், அவர்கள் - வாழ்பவர்கள், நாள் இடைகழித்து அமிர்து அயின்றல் - நாள்கள் சில இடையிட்டு உணவு உண்பாராயினும், எங்கும் இல இன்ப எழில் எய்தல் தரும் - அவ்வுணவே வேறியாண்டும் இல்லையான பேரின்பத்திற்குக் காரணமான அழகை அளிக்கும், தங்கிய தவத்தரசர்க்கு ஈந்தபயன் ஈது - தம்பால் தங்கி ஒழுகிய சிறந்த துறவிக்கு அத்தவம் அளித்த பயன் இத்தன்மைத்து, தான், ஏ, ஆல் : அசைகள், (எ - று.) “அயின்றாலும்“ என்பதில் உம்மை செய்யுள் விகாரத்தாற் றொக்கது. போக பூமியிலுள்ளார், மூன்றுநாள் இடையிட்டு ஒரு கடலையளவு உணவே உண்பர் என்க. அங்ஙனம் நாளிடையிட்டுண்ணும் சிறிய உண்டியே அவர்கள் உடல் வளம்படுதற்குப் போதியதாம் சத்துடைத்து என்றபடி. |
(இ - ள்.) அன்னமிகு போகம் - அத்தகைய பெரிய -நுகர்ச்சி யின்பத்தை, அவர் எய்தி - அப்போக பூமியோர் நுகர்ந்தவாறே, முன்னம் முடி பல்லம் அவை மூன்று உடன் முடித்தால் - முன் கூறி முடித்த மூன்று பல்ல காலங்களையும் ஒருங்கே கழிப்பாரெனில், பின்னும் அவர் தம் வழி பிறந்தவரை நோக்கி - மேலும் அவர்கள் தம்பாற் பிறந்த மகாரையும் கண்டு களித்து, இனிது ஏறுவது மன்னும் வான் உலகம் - அப்போக பூமியை நீத்து அவர்கள் ஏறிச்சென்று பிறப்பது நிலை பேறுடைய வானுலகம் ஆகும், மன்னோ : அசை, (எ - று.) போக பூமியினர் தம் நெடிய வாழ்நாள் முடிவில் ஒரே முறை ஆணும் பெண்ணுமாகிய இரட்டை மகவுகளை ஈனுவர் என்றும், இறக்கும்போது இவர் உடல்கள் முகில்போலக் கரைந்து மறையும் என்றும் கூறுப. |