பக்கம் : 1250
 

     (இ - ள்.) பல்லம் முதலோர் பகுதி மூன்று - இப்போக பூமியினும் வைத்துத் தலை
இடை கடையென்னும் முப்பகுதிகளிலே முதற்பகுதியோர் வாழ்நாள் அளவு மூன்று பல்லம்
ஆம், அல்ல இருவர்க்கு - எஞ்சிய இடையும் கடையும் ஆயினார்க்கு, இரண்டும் ஒன்றும் -
வாழ்நாள் எல்லை நிரலே இரண்டு பல்லமும் ஒருபல்லமும் ஆம், அம்முறையின் அமிர்தும்
ஏறும் - இம்முறையானே உண்டியும் ஏறுவனவாம், நல்ல நிலம் காலம் உயர்வு என்று
இவைகள் நாடி - நன்மையுடைய நிலத்தானும் காலத்தானும் சிறப்பானும் ஆராய்ந்து,
இவர்கள் செய்கை - இம்முத்திறத்த போகமாந்தரின் செயல்களை, சொல்ல உலவா -
கூறுவோமெனில் அவை கடைபோகா, சுடர் வேலோய் - ஒளிவேலுடைய வேந்தனே!,
(எ - று.)

     தலையிடை கடையாய போக பூமியினர்க்கு, வாழ்நாள் போன்றே உணவும் முறையே
மூன்று நாளிடையிட்டும் இரண்டுநாள் இடையிட்டும் ஒருநாள் இடையிட்டும் உண்ணப்படும்,
மேலும் அவ்வுண்டியின் அளவும் நிரலே கடலை, நெல்லிக்கனி, விளங்கனிகளின்
அளவிற்றாய் உயரும் என்ப.

(926)

 
2037. செம்பவழம் வெண்பளிங்கு 1பைந்தளிர் சிறக்கும்
வம்பழகு கொண்டமணி மேனியவர் பூவார்
கொம்பவிழுஞ் சண்பகங்கண் முல்லையிணர்க் கோங்கம்
அம்பவழ வண்ணமுத 2லானவர்மெய் நாற்றம்.
 
     (இ - ள்.) செம்பவழம் வெண் பளிங்கு பைந்தளிர் - சிவந்த பவழத்தையும்,
வெண்மையான பளிங்கையும் பச்சையான தளிரையும் போன்று, வம்பழகு கொண்ட - புதிய
அழகினைக் கொண்ட, அவர் - அத்தலையிடை கடையாய போக பூமியினரின், மணிமேனி -
மணியை ஒத்த உடல்கள், சிறக்கும் - முறையே திகழ்வனவாம், அம்பவழ வண்ணம்
முதலானவர் - அழகிய பவழ வண்ணம் முதலிய மூன்று வண்ணங் களையுமுடைய
தலையாய போக பூமியார் முதலிய மூவருடைய, மெய்நாற்றம் - உடலின் நறுமணமும், பூ
ஆர் கொம்பு அவிழும் - மலர்கள் செறிந்த கிளைகளிலே மலர்ந்துள்ள, சண்பகங்கள்
முல்லையிணர் கோங்கம் - நிரலே சண்பக மலர்களையும் முல்லை மலர்க் கொத்தையும்,
கோங்க மலரையும் ஒக்கும், (எ - று.)

     போக பூமியில் வாழ்வோருடைய மேனிவண்ணம் பவழம் முதலியவற்றை ஒக்கும்,
அவர் மேனி நாற்றம் சண்பகமலர் முதலியவற்றை ஒக்கும், என்க.

(927)

 

     (பாடம்) 1 பைந்தளிரவற்றின், ரிவற்றின், 2 லாலவர்மெய்.