பக்கம் : 1251
 
 
2038. நலங்கண்மிகு நம்முலகி னன்மைமிகு நீரால்
புலங்கண்மிகு போகமொடு போகநிலத் துள்ளால்
விலங்கொடுள 1வாழ்பறவை யவ்வுடம்பு விட்டால்
கலங்கண்மிகு கற்பநில 2மேறுவன கண்டாய்.
 
     (இ - ள்.) நலங்கள் மிகு நம் உலகில் - அறமுதலிய நன்மை மிகுதற்கு இடமான நம்
மண்ணுலகில், நன்மை மிகு நீரால் - பிறவுயிர்க்கு நன்மையே மிகும்படி வாழ்ந்தவொரு
தன்மை யுண்மையால், புலங்கள் மிகு போகமொடு - சுவை முதலிய புலன்களாலே பெருகும்
நுகர்ச்சியுன்பத்தோடே, போக நிலத்து உள்ளால் உள - அப்போக பூமியினூடே தோன்றி
வாழாநின்ற, விலங்குவாழ் பறவை - விலங்கினங்களும் வாழ்தலையுடைய பறவை
யினங்களும், அவ்வுடம்பு விட்டால் - அந்நிலத்தே அவ்வவ் வுடல்களை விட்ட பின்னர்,
கலங்கள் மிகு கற்பநிலம் ஏறுவன கண்டாய் - அணிகலன்கள் மிக்க கற்பலோகங்களிலே
சென்று பிறப்பனவாம், கண்டாய் : முன்னிலையசை, (எ - று.)

     அப்போக நிலங்களில் உள்ள பறவை முதலியனவும் அவ்வுலகத்தை விட்டால்
அவற்றினும் உயர்ந்த நிலங்களிலே சென்று பிறக்கும் என்க.

(928)

 
தேவர்கதித் துன்பம்

வேறு

2039. 3பூவிரியு நறுமேனிப் பொன்னிலங்கு நிமிர்சோதித்
தேவர்கடந் திறமுரைத்த றேவருக்கு மரிதெனினும்
நாவிரவி நாமுரைப்ப நால்வகையாய் 2 விரியுமவை
ஓவரிய பெரும்புகழா யொருவகையா லுரைப்பக்கேள்.
 
     (இ - ள்.) பூவிரியும் நறுமேனி - அழகு பரவுகின்ற நல்ல உடலையும், பொன் இலங்கு
நிமிர் சோதி - பொன்னிறமாகத் திகழ்ந்து பரவும் ஒளியையுமுடைய, தேவர்கள் தம் திறம்
உரைத்தல் - தேவர்களின் இயல்பைக் கூறுதல், தேவருக்கும் அரிது எனினும் -
அத்தேவர்களுக்கும் அருமையே ஆகும் என்றாலும், நாவிரவி நாம் உரைப்ப - நாவொடு
பொருந்த யாம் கூறுமிடத்து, ஒரு வகையால் உரைப்ப - இயன்றதோர் ஆற்றானே கூறு, ஓவு
அரிய பெரும்புகழாய் கேள் - ஒழிவற்ற பெரிய புகழுடையோயே ! கேட்கக் கடவாய், அவை
நால்வகையாய் விரியும் - அத் தேவர் பிறப்புக்கள் நான்கு வகைப்படுவனவாம்,
(எ - று.)

     தேவர்கள் நான்கு வகைப்படுவர் என்பதாம், அவ்வகைகளை மேலே கூறுப.

 (929)

 

  (பாடம்) 1 வாழ்பவை. 2 மேறுவர்கள். 3 பூவிரி். 4 விரிவகையும்.