பக்கம் : 1252
 
தேவர் வகை
2040. ஈரைவர் பவணர்களு மிருநால்வர் வியந்தரரும்
ஓரைவர் சோதிடரு மொருபதின்மே லறுவரெனுங்
காரைய முறுகையாய் 1கற்பகரு மீயுலகில்
சீரைய மில்லாத திருமலர்த்தார்த் தேவரே.
 
     (இ - ள்.) கார் ஐயமுறு கையாய் - மேகமும் ஐயப்படத் தக்க கொடைக்கையையுடைய
மன்னனே !, ஈர் ஐவர் பவணர்களும் - பத்துவகைப் பட்ட பவணர் என்றும், இருநால்வர்
வியந்தரரும் - எண்வகைப்பட்ட வியந்தரர் என்றும், ஓர் ஐவர் சோதிடரும் -
ஐந்துவகைப்பட்ட சோதிடர் என்றும், ஒருபதின்மேல் அறுவர் எனும் கற்பகரும் - பதினாறு
வகைப்பட்ட கற்பகர் என்றும், மீ உலகில் - மேலுலகத்தே வாழாநின்ற, ஐயம் இல்லாத சீர்
- ஐயப்படுதற் கிடமில்லாத பெருமையுடைய, திருமலர்த் தார்த் தேவரே -
இந்நால்வகையோரும், கற்பக மலர் மாலையையுடைய தேவர் வகையினராவர், (எ - று.)

     பவணர் வியந்தரர் சோதிடர் கற்பகர் என்னும் நால்வகைப் படுவர் தேவர் என்க.

(930)

 
2041. உற்றவர்க்கு 2மேலவர்க ளொன்பதின்ம ரொன்பதின்மர்
மற்றவர்க்கு 3மேலவரை வகையரவர் மேலவர்கள்
4இற்றவர தெண்வகையா மிவர்க்கென்று மில்லாத
செற்றநோய் செயிர்பகையென் றிவைமுதல செலவுணர்நீ.
 
     (இ - ள்.) உற்றவர்க்கு - இங்குக் கூறப்பட்ட நால்வகைத் தேவர்கட்கும், மேலவர்கள்
- உயர்ந்தவர்கள், ஒன்பதின்மர் - ஒன்பது வகையினர் உளர், ஒன்பதின்மர் மற்றவர்க்கு -
இவ்வொன்பதின்மருக்கும், மேலவர் - உயர்ந்தவர், ஒன்பதின்மர் - ஒன்பதுவகையினர்
உளர், ஐவகையர் மேலவர் - அவர்க்கும் உயர்ந்தவர் ஐந்துவகையினர் உளர், அவர்
மேலவர் - அவ்வை வகையினரே இறுதியாக உயர்ந்தவர் ஆவர், இற்று அவரது எண்வகை
- அவருடைய தொகை யெண்ணின் வகை இத்தன்மைத்து, ஆம் இவர்க்கு - இங்ஙனம்
 ஆகிய தேவர்களுக்கு, செற்றம் நோய் செயிர்பகை என்று இவைமுதல இல்லாத -
வெகுளியும் பிணியும் செயிர்க்கும் பகையும் இவைமுதலிய பிறவும் என்றும் இல்லாதனவாம்,
நீ செல உணர் - நீ நன்கு உணர்ந்துகொள்க, (எ - று.)
 

     (பாடம்) 1கற்பகஞ் சேருலகத்து. 2 மேலவருமொன் பதின்மர்.

     3 மேலவருமைவகையர் மணிமுடியாய். 4 இற்றிவர தெண்வகை.